புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஜனநாயகத்தின் முற்றுப்புள்ளியாகும் – ஜீ.எல்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இதுவரை மக்கள் அனுபவித்த ஜனநாயக உரிமைகளுக்கு முற்றுப் புள்ளியாக அமையக்கூடும் என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஊடக சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் கூடும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இந்த சட்டம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்படுவதாகவும், ஜனாதிபதி பிறப்பிக்கும் உத்தரவு, அவர் அதை ரத்து செய்யும் வரை காலவரையறையின்றி செல்லுபடியாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளை அறிவித்து அவற்றில் நுழைவதற்கும் தகவல் சேகரிப்பதற்கும் தடைகள் விதிக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் நீதிமன்றக் காவலில் உள்ள நபரை வெளியேற்றி பொலிஸ் காவலுக்கு ஒப்படைத்து தொடர்ந்து காவலில் வைக்கும் அதிகாரம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது ஊடக சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாகும் என ஜீ.எல்.பீரிஷ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டம் “பயங்கரவாதத்திலிருந்து மக்களை பாதுகாக்க அல்ல, மாறாக அரசை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது” என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால், மக்கள் நீண்ட காலமாக அனுபவித்த அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படலாம் என்றும், குறிப்பாக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், ஆயுதப்படைகள், போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்படும் நிலையில், மக்கள் அச்சமின்றி வாழும் உரிமையே பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri