ஹட்டன் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய நடைமுறை
ஹட்டன் பேருந்து நிலையத்தில் நிலவும் அதிகளவிலான பேருந்து மற்றும் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில் விசேட தனியார் பேருந்து போக்குவரத்து முகாமைத்துவத்திற்கான முன்னோடித் திட்டமொன்று இன்று (16.11.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அனைத்து தனியார் பேருந்துகளும் பயணிகளுடன் ஒரே நேரத்தில் பேருந்து நிலையத்திற்குள் பிரவேசிப்பது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
இதற்குப் பதிலாக பேருந்து நிலையத்திற்கு கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையத்திற்கு அருகில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தங்களுக்குரிய பயண நேரம் வந்தவுடன் மாத்திரமே குறித்த பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேலைத்திட்டம்
ஹட்டன் பொலிஸார், ஹட்டன் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை பேருந்து போக்குவரத்து பரிசோதகர்கள் ஆகியோரின் பங்கேற்புடனும் மேற்பார்வையுடனும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த முன்னோடித் திட்டத்தின் ஊடாக ஹட்டன் பேருந்து நிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
