தனிநபர் வருமான வரிக்கு எதிராக அரச ஊழியர்கள் போர் கொடி
புதிய தனிநபர் வருமான வரியை மீளப்பெறுமாறு கோரி 20,000 இற்கும் மேற்பட்ட வைத்தியர்களின் கையொப்பங்களுடன் கூடிய மனுவொன்று விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய தனிநபர் வருமான வரியை நீக்கக் கோரி நாடு தழுவிய ‘கறுப்பு வாரப் போராட்டத்தை’ நடத்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
வரி விதிப்பதை தாம் எதிர்க்கவில்லை, ஆனால் வரித் திருத்தங்களை அறிமுகப்படுத்தும் போது நியாயமாக இருக்க வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பணியாளர்கள் வெளியேற்றம்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கலாநிதி ஹரித அலுத்கே,“திறமையான பணியாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாகவும், இது தேசத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
வருமான வரி சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாட்டை பின்னோக்கி தள்ளுகின்றன. நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்களை நிறுத்துவது குறித்து பலர் பேசுகின்றனர். ஆனால், அத்தகைய முடிவுக்கான காரணத்தை ஆராய யாரும் தயாராக இல்லை.” என கூறியுள்ளார்.