பளை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய பிரேரணை
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் உறுப்பினர் ஈஸ்வரன் டயாளினி முன்வைத்த பிரேரணை பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபையில முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தியில் மூன்று உறுப்பினர்களில் ஒருவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்க ஏனைய இருவர் நடுநிலை வகித்தனர்.
இருப்பினர் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உறுப்பினர் ஈஸ்வரன் டயாளினி முன் வைத்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கையில் 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு, பின்னர் நிரந்தரமாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), கடந்த பல தசாப்தங்களாக நாட்டின் ஜனநாயகப் பண்புகளையும், அடிப்படை மனித உரிமைகளையும் கடுமையாகப் பாதித்து வந்துள்ளது இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் மற்றும் நீண்டகாலமாக விசாரணைகளின்றி சிறைகளில் வாடுபவர்களில் பெரும்பான்மையானோர் தமிழ் மக்களே ஆவர்.
நீண்டகாலத் தடுப்புக்காவல்
இச்சட்டம் தமிழ் மக்களை ஒடுக்குவதற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒன்று போன்ற தோற்றப்பாட்டுடன், அவர்கள் மீதே மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இக்கொடூரச் சட்டமானது நாட்டின் படைப்பாளிகள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும், அவர்களின் ஜனநாயக ரீதியான கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதற்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
தன்னிச்சையான கைதுகள், நீண்டகாலத் தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளுக்கு இச்சட்டம் வழிவகுப்பதுடன், இது நாட்டின் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கும் சர்வதேச மனித உரிமை சாசனங்களுக்கும் முரணானதாக காணப்படுகிறது.
எனவே, இச்சபையானது பின்வரும் தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என இப்பிரேரணை மூலம் வலியுறுத்துகிறேன். தமிழ் மக்களைப் பாரியளவில் பாதிப்புக்குள்ளாக்கியும், சிறுபான்மையினரை அச்சுறுத்தியும் வரும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) அரசாங்கம் உடனடியாக முழுமையாக நீக்க வேண்டும்.
இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை அரசு நசுக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.