ஈழத்தமிழர்களின் தாயக இருப்பை கேள்விக்குள்ளாக்கும் புதிய விடயம்
ஈழத்தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏதோவொரு பிரச்சினைக்கு முகம் கொடுத்தவாறே இருந்து வருகின்றனர் பிரச்சினைகளும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கின்றது என சமூக விடய ஆய்வுகளில் ஈடுபடுவோர் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழர் வாழ்விடங்களில் அமைக்கப்பட்ட இராணுவ முகாம்களை அகற்றக்கோரி போராடிய மக்களுக்கு அதிலிருந்து மெல்ல தீர்வு கிடைத்து வருகின்ற நிலையில் அது மற்றொரு நீண்டகால நெருக்கடிக்கு அடித்தளமிட்டுச் சென்று விடுவதை கவனிக்கத் தவறியவர்களாக ஈழத்தமிழர்கள் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என தெரிவித்துள்ளனர்.
தோன்றும் எச்சங்கள்
ஈழத்தமிழர்களின் தாயகத்தில் பல இராணுவ முகாம்கள் சத்தமின்றி அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.நேற்று இருந்த இராணுவ முகாமை இன்று காணமுடியாது என இராணுவ முகாம்கள் அகற்றப்படுதல் தொடர்பில் மக்களிடையே பேச்சு நிலவி வருவதை அவதானிக்கலாம்.
அவதானிப்புக்களின் அடிப்படையில் இராணுவ முகாம்களை அகற்றுவதில் நீண்ட காலத் திட்டமிடலை கொண்டிருக்க வேண்டும்.ஒரு இடத்திலுள்ள இராணுவ முகாம் அகற்றப்பட்டு சில காலங்களின் பின்னர் மற்றொரு இடத்தில் உள்ள முகாம் அகற்றப்பட்டு விடுகின்றது.
கைவிடப்பட்ட இராணுவ முகாம்களில் சீமெந்துக் கட்டுமானங்கள் மற்றும் கருங்கல், செங்கல் கட்டுமானங்கள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இவையெல்லாம் இலங்கை இராணுவத்தினரின் கட்டுமான பாணியில் இருக்கின்றன. இராணுவ முகாமில் இருந்த வழிபாட்டு தளங்கள் பௌத்த சமயத்தின் புத்தரை வழிபடுதலுக்கானவை என்பதால் அவையும் பௌத்த சமயத்தின் சாயலையே கொண்டிருக்கின்றன.
இராணுவ முகாம்களை கைவிட்டுச் செல்லும் இராணுவத்தினர் இவற்றை அங்கே எச்சங்களாக விட்டுச் செல்கின்றனர்.
முகாம்களை அமைக்கும் போது அந்த சூழல் எவ்வாறு இருந்ததோ அவ்வாறு விட்டுச் செல்லும் போக்கு இல்லை என்பதை அவதானிக்க முடிகின்றது.
தூண்டாய் வடக்கில் இருந்த இராணுவ முகாம், மன்னகண்டல்,கரிவேலன்கண்டல், களிக்காடு, நெடுங்கேணிச் சந்தி,கற்சிலைமடு, ஒலுமடு,சம்மளங்குளம் இராணுவச் சோதனைச்சாவடி, நெடுங்கேணி வட்டச்சந்தி போன்ற கைவிடப்பட்ட முகாம்கள் சிலவற்றை இங்கு உதாரணமாக எடுத்துரைக்க முடியும்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள்
தொல்பொருட்களை ஆதாரமாக கொண்டு பௌத்த தொல்லியல் இடங்களை தேடுவதாகச் சொல்லிக்கொண்டு பௌத்த சிங்கள இடங்கள் என தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை ஆக்கிரமித்து வரும் போக்கினை சிங்கள தேசியவாதிகள் பின்பற்றி வருகின்றனர்.
கைவிட்டுச் சென்ற இராணுவ முகாம்களில் புத்தரை வழிபட்ட இடங்களும் உள்ளன.அந்த வழிபாட்டிடங்களோடு சேர்ந்த இராணுவத்தினரின் வாழிடங்களும் உள்ளன.அவையெல்லாம் தடயங்களாக அமையும் வகையில் கைவிடப்பட்ட இராணுவ முகாம்களில் மிச்சமிருக்கின்றன.
இன்று ஆக்கிரமிப்பின் அடையாளமாக உள்ள இராணுவ முகாம்களில் சில முகாம்கள் கைவிடப்பட்ட முகாம்களாக மாறிக் கொண்டிருக்கின்றன.அவை மக்கள் வாழ்விடங்களிலும் காடுகளிலுள்ளும் இருப்பதோடு ஒதுக்குப்புறங்களிலும் கூட இருக்கின்றன.நாளடைவில் இவை புதர் மண்டிப் போகலாம்.பழைய கட்டிட இடிபாடுகளாக மாறிப் போகலாம்.
1977ஆம் ஆண்டில் குமுழமுனை குருந்தூர் மலையில் பிக்கு ஒருவரை நியமித்ததாகவும் விகாரை அமைக்கப்பட்டிருந்ததாகவும் ஓயாத அலைகள் என பெயரிடப்பட்டு நடந்த வெற்றிச்சமரான முல்லைப் போரினை நினைவு மீட்டும் ஓளிவீச்சு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று ஒட்டுசுட்டானில் அமைக்கப்பட்ட விகாரை மற்றும் வட்டுவாகல், கொக்கிளாய், தையிட்டி, நாவற்குழி போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட புதிய விகாரைகள் இன்னும் பல வருடங்களின் பின்னர் பழைய விகாரைகளாக விவரிக்கப்படும் சூழல் தோன்றும்.
இத்தகைய போக்கினையே கைவிடப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் உள்ள எச்சங்களாக உள்ள கட்டுமானங்கள் பௌத்த எச்சங்களாக அடையாளப்படுத்தக்கூடிய சூழல் தோன்றும். அப்போது ஈழத்தமிழர் நிலங்களில் பெருமளவு மீண்டும் பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டு தமிழர்கள் துரத்தப்பட வாய்ப்பாக்கி விடும்.
தமிழர்களின் வரலாற்று நினைவுகள்
தமிழர்கள் தங்களின் வரலாற்று நிகழ்வுகளை பதிவுசெய்து கொண்டு பயணிக்க வேண்டிய காலத்தில் இருப்பை உணரத்தலைப்பட வேண்டும்.
எந்தவொரு வரலாற்றுப் பதிவும் நிரந்தரமான பொதுக்கட்டமைப்பு ஒன்றினூடாக முன்னெடுக்கப்பட்டு பாதுகாக்க வேண்டும்.அந்த சூழல் அல்லது அப்படியொரு பொதுக்கட்டமைப்பு தமிழர்களிடம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாத களச்சூழல் இன்று இருப்பதையும் சமூக விடய ஆய்வாளர் சுட்டிக் காட்டுவது குறிப்பிடத்தக்கது.
தெளிவான வரலாற்றுப் பார்வையோடு அரசியல் தெளிவோடு நிகழ்வுகள் வரலாறாக பதிவு செய்யப்பட வேண்டும்.அல்லது ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான மூலாதாரங்களையாவது சேமித்து வைக்க வேண்டும்.
சேமிக்கப்பட்ட தரவுகள் அல்லது ஆதாரங்கள் யாழ்.நூலக எரிப்பு போன்றதொரு செயலொன்றால் அழிக்கப்படும் ஆபத்துக்களின் வாய்ப்புக்கள் தொடர்பிலும் கருத்திலெடுத்துச் செயற்பட வேண்டும்.
இவ்வலாறு சேமிக்கும் தரவுகள் ஈழத்தமிழரின் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து இராணுவ முகாம்களை நிறுவி அதனை கைவிட்டுச் செல்லும் போது எச்சங்களாக விட்டுச் சென்று இருந்தவையே இவை எனவும் ஆதலால் இது சிங்கள பௌத்தர்களினது வாழிடங்களாக இருந்ததில்லை எனவும் எடுத்தியம்ப உதவும் என்பது திண்ணம்.
கருத்து, எதிர்க்கருத்து என இரு நிலைகளில் கருத்துப் பதிவுகள் இருக்கும் போது ஈழத்தமிழர்கள் மீதான எதிர்க்கருத்துக்கள் அதிகமாகும் சூழலில் அல்லது எதிர்க்கருத்துக்கள் பாதுகாக்கப்பட்டு உண்மை நிலைகள் அழிக்கப்பட்டும் ஒரு சூழலில் எச்சியவற்றை மூலாதாரமாகக் கொண்டு ஒரு வரலாற்று ஆய்வு எதிர்காலத்தில் நடந்தேறுமானால் அந்த ஆய்வு ஈழத்தமிழர் தொடர்பிலான தவறான வரலாற்று முடிவுகளுக்கு வித்திட்டுச் செல்லலாம்.
இதற்கு பண்டாரவன்னியன் வரலாறு தொடர்பிலான பதிவுகள் சிறந்த உதாரணமாகும்.
என்ன செய்யலாம்
கைவிடப்பட்ட இராணுவ முகாம்களில் உள்ள கட்டுமானங்களை முற்றாக அகற்றி அவை இயற்கையமைப்போடு இசையும்படி விட வேண்டும்.அல்லது அவை தொடர்பான குறிப்புக்களை பதிவுசெய்து ஆவணமாக்க வேண்டும்.
பொதுமக்களின் காணிகளில் இருந்த இராணுவ முகாம்களை விட்டுச்செல்லும் போது பொது மக்களே எச்சங்களை அழித்து இயற்கையமைப்புக்கு அவ் நிலங்களை கொண்டு வருகின்றனர் என்பது பொது நிலங்களில் உள்ள இடங்களில் மட்டும் இது சாத்தியப்படாது இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளை ஆவணமாக்க வேண்டும். அப்போது தான் அவை எதிர்காலத்தில் நீராவியடி பிள்ளையார் கோவில் போன்றதொரு பிரச்சினை ஏற்படுமிடத்து அதனை எதிர்கொள்ள தக்க சான்றாக பயன்படுத்திக்கொள்ள உதவும்.
ஈழத்தமிழரின் அரசியல் பரப்பில் ஈழத்தமிழர்களின் பூர்வீக இடங்களை சிங்களவர்கள் ஆக்கிரமிப்புச் செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதனை எதிர்த்து போராட சற்றும் சளைத்தவர்களாக அரசியலாளர்களும் ஆர்வலர்களும் இல்லை என்பதை அவர்கள் தங்கள் தீரமிகு போராட்டங்கள் மூலம் நிறுவியிருக்கின்றனர்.
ஆனாலும் வரும் முன் காத்தல் என்பதற்கமைய பூர்வீக இடமொன்று ஆக்கிரமிப்படுவதற்கான ஏது நிலையொன்றை இல்லாது செய்து விட்டால் ஆக்கிரமிப்புச் செய்தலுக்கான ஏதுக்கள் தோன்றும் போது அவற்றை உணர்ந்து அறிந்து ஆரம்பத்திலேயே தடுத்துவிட்டால் அதற்காக எதிர்ப்போராட்டங்களை நடத்த வேண்டிய தேவையினளவு குறைந்து செல்லும் என்பது நோக்கத்தக்கது.
இத்தகைய சுட்டிக்காட்டல்கள் ஈழ ஆதரவாளர்களால் எடுத்து நோக்கி ஆராய்ந்து தேவையானவற்றை முன்னெடுத்துச் செல்லலுக்கான செயற்பாடுகளின் ஆரம்பத் தூண்டல் மட்டுமே.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |