ராஜகுமாரியின் வழக்கில் புதிய திருப்பம்
ராஜன் ராஜகுமாரியின் மரணத்திற்கு பின்னர் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பொறுப்பதிகாரி மீண்டும் அதே பதவியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் இன்று தெரியவந்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனக பெரேரா, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வெலிக்கடை பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வரும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
நீதவானின் உத்தரவு
குறித்த சந்தேகநபர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதேவேளை, இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இன்று அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், பிரதிவாதிகள் சார்பில் முன்வைத்த ஆட்சேபனையின் அடிப்படையில் அந்த அடையாள அணிவகுப்பை ரத்து செய்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவல, சந்தேகநபர்களை எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் அடையாள அணிவகுப்புக்காக முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |