இருப்பிடங்களை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகளுடன் மேலும் பல வசதிகள்
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைகளினால் தமது இருப்பிடங்களை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் இலவச வீடுகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீட்டுத்திட்டத்தில் இருந்தே இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளது.
வீடுகள் தாக்கப்பட்டமை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் விலகுமாறு நாட்டில் பல்வேறு போராட்டங்களும் தாக்குதல்களும் இடம்பெற்றன.
இதன் விளைவாக கடந்த மே ஒன்பதாம் திகதி போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிரான வன்முறைகளின் போது சுமார் 80 அரசியல்வாதிகளின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டன.
இதன்படி, மகிந்தானந்த அளுத்கமகே, ரோகித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ச, ரொஷான் ரணசிங்க, சசீந்திர ராஜபக்ச, ஜயந்த கெட்டகொட, அமரகீர்த்தி அத்துகோரள, சம்பத் அத்துகோரல, ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி, பியும் அனுபரி பஸ்குவல், அமல் ரண்னாவகே, சசீந்திர ராஜபக்ச போன்றவர்களின் வீடுகளே தாக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்களுக்கு இலவச வீடுகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மே 18 அன்று, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக நடவடிக்கையாக வீடுகள் வழங்கப்படும் என்றும், ஆனால் அவர்களின் உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாற்றப்படாது அரசிடமே இருக்கும் என கூறியுள்ளார்.
முன்னாள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக இருந்த பிரசன்ன ரணதுங்க, மடிவெலயில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பு யு.டி.எ முதலீட்டு திட்டத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தலவத்துகொட வீடமைப்பு திட்டம் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடிவெலவில் தற்போது குடியிருப்புகள் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 அலகுகள் வழங்கப்படும்.
எனினும் அவ்வாறு வழங்கப்படும் வீடுகளின் பெறுமதியை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் இருந்து கழித்து கொள்ளவோ, கடன் அடிப்படையில் அவர்களுக்கான வீடுகளை கையளிக்கவோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றே பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
அரசியல்வாதிகளுக்கு ஒருவருட காலத்துக்கு இலவச அடிப்படையில் வீடுகளை வழங்கவும், அவர்களின் சொத்து இழப்புக்களை மதிப்பிட்டு நஷ்டஈடு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனது பதவிக் காலத்துக்குள் அரசியல் தீர்வு நிச்சயம்! ஜனாதிபதி ரணில் உறுதி |