விரைவில் புதிய முறையில் தேர்தல் நடக்கும்..! எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலடிக் கொடுத்த சந்தன அபேரத்ன
நாட்டுக்கு பொருத்தமான தேர்தல் முறையொன்றை ஒருவருட காலத்துக்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று(25.05.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, மிக விரைவில் நாடாளுமன்றத்துக்கு அறிக்கையிடுவோம்.

அத்துடன், தேர்தல் முறைமை தொடர்பான சட்டம் வாக்காளர்களைப் பதிவு செய்யும் சட்டம், உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டம், நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சட்டம் ஆகியவற்றுடன் கடந்த காலங்களில் குறித்த சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் குறித்த சட்டங்களின் ஏற்பாடுகளின் கீழான ஒழுங்கு விதிகள் என்பவற்றை மீளாய்வு செய்யவுள்ளோம்.
மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் விசேட நாடாளுமன்ற செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் எமது குழு மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராயவில்லை.
நாட்டில் நடைமுறையில் உள்ள தேர்தல்கள் முறைமை குறித்து மக்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.
தேர்தல் முறைமை
இந்த முரண்பாடுகளுக்கு தீர்வு கண்டு நாட்டுக்கு பொருத்தமான தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவது இந்த குழுவில் பிரதான நோக்கமாகும்.
தேர்தல் முறைமை தொடர்பில் பொதுமக்கள் தமது யோசனைகள் மற்றும் அபிலாசைகளை 2026.07.15 வரையான காலப்பகுதிக்குள் எமது குழுவிடம் முன்வைக்கலாம்.

இதனையடுத்து, ஒருவருட காலத்துக்குள் முழுமையான அறிக்கையொன்றை நாடாளுமன்றத்திடம் சமர்ப்பித்து, சிறந்த தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம் என்றார்.
தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து, சட்டங்களைத் திருத்தியமைத்தல், சீரமைத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் தேவையை மதிப்பிடுவதும், தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்குத் தேவையான சீர்திருத்தங்களையும் திருத்தங்களையும் பரிந்துரைப்பதும் இந்தக் குழுவின் முக்கிய பணியாக பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ள டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை - மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் அட்டைகள் ஒழிப்பு