ஊழல் குற்றங்களை முடிவுக் கொண்டு வர புதிய முயற்சி - இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
ஊழல் மோசடி, போதைப்பொருள் அற்ற தூய்மையான நாடாக கட்டியெழுப்புவதற்கும் எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்காக எங்களுடன் இளைஞர் யுவதிகள் கைகோர்க்குமாறு மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் பிரதி தலைவரும் ஊடக பேச்சாளரும் சமூக செயற்பாட்டாளருமான அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் அங்குராப்பணம் நேற்று(06.09.2026) பாலமீன்மடுவில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் தலைவராக ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் முத்துலிங்கம் செயலாளர் ஜேம்ஸ் ரூபசேன, பிரதி தலைவரும் ஊடக பேச்சாளரும் சமூக செயற்பாட்டாளருமான அந்தனிசில் ராஜ்குமார் நியமிக்கப்பட்டனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைப்பின் நோக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தில் ஊழல், மோசடி, போதைப்பொருள் வியாபாரம், தொடர்பாக முக்கியமாக இருக்கும் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர வேண்டிய தேவையின் அடிப்படையில் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம். எனவே பொது மக்கள் இந்த ஊழல் தொடர்பாக எங்களிடம் முறைப்பாடு செய்வதற்கு வெகு விரைவில் அலுவலகம் ஒன்றை திறக்கவுள்ளோம்.
இதில் எந்த விதமான அரசியல் சார்ந்த அரசியல் செயற்பாடுகளும் இல்லை, இது முற்று முழுதாக அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களின் நலன் சார்ந்த ஒரு ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தி உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து ஊழலை தடுப்பதற்காகவே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

இன்று இந்த அமைப்பு உருவாக்கி தினமான நேற்று(06) அரச திணைக்களங்கள் விடுமுறை நாளில் வன பரிபாலன சபை அரச வாகனத்தை எடுத்துக்கொண்டு மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வழியிலே பாலமீன்மடுவில் அமைந்துள்ள ஒரு தென்னந் தோட்டத்தில் திணைக்களத்தின் சீருடையை அணிந்து கொண்டு இருவர் நடந்து கொண்ட விதம் உயிராபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ளது.
எனவே அரச வாகனத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்தியது மட்டுமல்லாது மதுபோதைக்கு பயன்படுத்திய இரு அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்கிறோம்.
ஊழல் குற்றங்களை குறைக்க நடவடிக்கை
இவ்வாறு அரச வாகனத்தை மக்கள் வரிப்பணத்தில் அதற்கு எரிபொருளை நிரப்பி அரச வாகனத்தில் மதுபானங்களை கொள்வனவு செய்து அரச சொத்தை வீணடித்து வரும் இவ்வாறான சில அரச திணைக்கள ஊழல் மோசடி, அரச சொத்தை துஷ்பிரயோகம் செய்யும் உத்தியோகத்தர்கள் தொடர்பாக வெளி கொண்டு வருவதன் மூலம் இந்த மோசடிகளை தடுக்க முடியும் என்பதற்காக இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
இன்று மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

அதேவேளை அரசாங்கம் முன்னெடுக்க இருக்கும் பாடசாலை மாணவர்களின் புத்தக பைகள் பாடசாலைக்குள் நுழையும்போது சோதனையிடும் திட்டத்தை கொண்டு வரவுள்ளது.
எனவே இலங்கையை ஒரு ஊழல் மோசடி போதைப் பொருள் அற்ற தூய்மையான நாடாக கட்டியெழுப்புவதற்கும் எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்காக ஒவ்வொரு பிரதேசத்தில் இருந்து இளைஞர் யுவதிகள் உங்கள் பிரதேசத்தில் நடக்கும் ஊழல், மோசடி மற்றும் போதை வியாபாரம் போன்ற சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்பாக தகவல்களை தந்து உதவினால் நாங்கள் பொலிஸாருடன் இணைந்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தீர்வினை பெற்றுத் தருவோம். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் யுவதிகள் எங்களுடன் கைகோர்க்கலாம் என்றார்.