'ஹரக் கட்டா' லஞ்ச விவகாரம்: விசாரணைகளல் அம்பலமாகும் புதிய விடயங்கள்
பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனான 'ஹரக் கட்டா' என்பவரிடமிருந்து 1,200 இலட்சம் ரூபாயை லஞ்சமாகப் பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் லசந்த விக்ரமசேகர எனப்படும் மிதிகம லசா இந்த லஞ்ச விவகாரத்தில் இடைத்தரகராகச் செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உட்பட மூவர், ஹரக் கட்டா தரப்பிலிருந்து இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு (2025) அக்டோபர் 22ஆம் திகதி வெலிகம பிரதேச சபை வளாகத்தினுள் வைத்து, எதிர்த்தரப்பு பாதாள உலகக் குழுவொன்றின் உறுப்பினரால் 'மிதிகம லசா' சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் ஹரக் கட்டாவின் பாதாள உலகக் குழுவில் மிகவும் செல்வாக்குமிக்க ஒரு உறுப்பினராக இருந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹரக் கட்டாவின் தரப்பிலிருந்து ரகித்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு 120 மில்லியன் ரூபாய் பணத்தை வழங்குவதற்கான இடைத்தரகராக மிதிகம லசாவே செயற்பட்டுள்ளார்.
ஹரக் கட்டா படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பது, பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையிலிருந்து அவரை சாதாரண சிறைச்சாலைக்கு மாற்றுவது மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பது போன்ற உதவிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி ரகித்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் இப்பணத்தைப் பெற்றதாக ஹரக் கட்டாவின் மனைவி எனக் குறிப்பிடும் பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த லஞ்ச விவகாரம் குறித்து கலந்துரையாடுவதற்காக துபாய் நாட்டுக்குச் சென்ற குழுவில் மிதிகம லசாவும் இணைந்து பயணித்ததாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த கொடுக்கல் வாங்கல் கடந்த 2023ஆம் ஆண்டிலேயே இடம்பெற்றுள்ளது. அக்காலப்பகுதியில் மிதிகம லசா வெலிகம பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரக் கட்டாவிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சட்டத்தரணி ரகித்த ராஜபக்ஷ, சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.