யாழ். பல்கலைக்கழக பேரவைக்கு காத்திருக்கும் சவால்! அடுத்த துணை வேந்தரில் தவறிழைக்காதீர்கள்..
எதிர்வரும் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை(09/12/2025) அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கான தேர்வு நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக்கத்தின் தற்போதைய வேந்தர் சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.
இதன்படி, புதிய வேந்தர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டிருந்த நிலையில், பீடாதிபதிகள் மற்றும் முன்னாள் பீடாதிபதிகள் உள்ளடங்களாக ஆறு விண்ணப்பங்கள் கிடைத்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தன.
துணை வேந்தர் தெரிவு
இதன்படி, மேற்படி விண்ணப்பங்களை மேற்கொண்டவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று பின்னர், சில கோட்பாடு மற்றும் முறைகளின் கீழ் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படுவதோடு அவர்களுள் ஒருவர் எதிர்வரும் 9ஆம் திகதி துணை வேந்தராக தெரிவு செய்யப்படவுள்ளார்.
கல்வி நிர்வாகத்தில் முக்கியத் தலைமைப் பதவியாகக் கருதப்படும் இந்த பதவியிற்கான தேர்வு, அரசியல் சார்பின்மையும், கல்வித் தகுதியும், நிர்வாக அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

துணை வேந்தருக்கான விண்ணப்பங்களை வழங்குபவர்கள், அத்துடன் சேர்த்து கல்வி பங்களிப்பு, ஆராய்ச்சி வரலாறு, நிரவாக அனுபவம் மற்றும் கல்வி நிர்வாகத்தில் இருக்கும் ஈடுபாடு போன்றவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இதனையடுத்து நேர்முகத் தேர்வுக்கு அவர்கள் அழைக்கப்படும் போது பல்வேறு மதிப்பீடுகள் அவர்களுடைய விண்ணப்பங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும்.
அவற்றுள், உயர்கல்வித் துறையில் அனுபவம், நிர்வாகத் திறமை, ஆராய்ச்சி மற்றும் வெளியீட் டு சாதனைகள், பல்கலையின் வளர்ச்சிக்கான கொள்கை திட்டங்கள் மற்றும் நிலைப்பாடுகள், கல்வி தர உயர்வுக்கான திட்டங்கள் உள்ளிட்டவை மதிப்பாய்வு செய்யப்படும்.
இதன்படி, நேர்முகத் தேர்வின் முடிவில் இறுதியாக பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்களின் இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக வரை தேர்வு செய்து, அவர்களின் பெயர்ப்பட்டியலை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த மூவரும் அதிக வாக்குகளைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இதனையடுத்து, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு, குறித்த மூன்று தேர்வுகளின், கல்வித் தகுதி, ஒழுக்க நெறி மற்றும் சேவை வரலாறு, சட்டரீதியான தகுதி மற்றும் விபரங்களை சரிபார்த்த பின்னர் அது தொடர்பான பரிந்துரைக் கோப்பை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்.
இதன்படி, துணை வேந்தர் தொடர்பான இறுதி தீர்மானத்தை ஜனாதிபதியே எடுப்பார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று அந்த மூன்று தெரிவுகளில் ஒருவரை ஜனாதிபதி துணை வேந்தராக நியமனம் செய்வார்.
குறித்த துணை வேந்தர் மூன்று வருட பணி காலத்தின் அடிப்படையில் இரு முறை நியமனங்களோடு பணியாற்ற முடியும்.
இப்படி மிக நீண்ட செயன்முறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் துணை வேந்தர் பல்கலைக்கழக சமூகத்தின் மாண்பிற்கும், கல்விச் சமூகத்திற்கும் அளப்பரிய பங்காற்ற வேண்டியவராகவும், அதீத பொறுப்புக்களைக் கொண்டவராகவும் இருக்க வேண்டியது மிக முக்கியம்.
பல்கலைக்கழக நிர்வாகத்தில் துணை வேந்தர் பதவி மிக முக்கியமானதாகும். வேந்தருக்கு அடுத்தபடியாக பல்கலைக்கழகத்தின் கல்வி, நிர்வாகம், மாணவர் விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி துறைகளை ஒருங்கிணைத்து முன்னேற்றும் பொறுப்பு இவருக்கே உண்டு.

கல்வி நிர்வாகத்தை மேற்பார்வை செய்வது, துணைத் தலைமை பொறுப்புகள், மாணவர் விவகாரங்களை ஒருங்கிணைத்தல், சமுதாயம் மற்றும் பன்னாட்டு இணைப்புகளை வலுப்படுத்தல், நெருக்கடி மேலாண்மை உள்ளிட்ட பல பொறுப்புக்கள் துணை வேந்தருக்குரியவை.
மேலும் துணை வேந்தர் தினசரி நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதுடன், பீடங்கள், துறைகள் உள்ளிட்டவற்றின் முன்னேற்றங்களையும் கண்காணிக்க வேண்டியவர்.
அத்துடன், பாட்டத்திட்ட மாற்றங்கள், பரீட்சைத் திட்டமிடல்கள் மற்றும் தர நிலைகள் உள்ளிட்ட கல்வி சார்ந்த அனைத்து முக்கிய முடிவுகளிலும் துணை வேந்தரின் பங்கு அளப்பரியது.
இதேவேளை, பல்கலையின் வேந்தர் இல்லாத சந்தர்ப்பங்களில் இடைக்கால வேந்தராக பொறுப்பேற்று பல்கலையின் முழு நிர்வாகச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு பல்கலைக்கழக நிர்வாகத்தின் தொடர்ச்சியான இயக்கத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பாக கருதப்படுகின்றது.
மாணவர் பிரச்சினைகள், விடுதி நலத் திட்டங்கள், ஆலோசனை சேவைகள், வளாகத்தில் ஏற்படும் குழப்பநிலை, போராட்டங்கள் உள்ளிட்ட அவசர நிலைகளிலும் துணை வேந்தரின் பணியே அளப்பரியதாக காணப்படுகின்றது. இவற்றை முறையாக கையாள்வதோடு, பல்கலை மற்றும் மாணவர் சமூகத்திற்கு இடையிலான பிணைப்பை பேண வேண்டியதும் அத்தியாவசியமாகின்றது.
அது மாத்திரமல்ல, மாணவர்களுக்கு இடையே நடக்கும் தீவிர எதிர்ப்புக்கள், சட்ட விரோத செயற்பாடுகள், அரசியல் அழுத்தங்களிலிருந்தும் நெருக்கடியான சூழ்நிலைகளை வினைத்திறனோடு கையாள வேண்டியதும், தீர்வுகளை காணும் திறனும் துணை வேந்தரையே சாரும். அத்தோடு, நெருக்கடி காலத் தீர்வுகள் துணை வேந்தரின் நிர்வாகத் திறனையும் பறைசாற்றுவதாக அமைகின்றது.
அதுவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் போன்ற வரலாறும், சமூக உணர்வும் கொண்ட கலைக்கூடத்தில் துணை வேந்தரின் பொறுப்புக்களும், கடமைகளும், சேவையும் பல்கலைக்கழத்திற்கு மாத்திரம் அல்லாமல் அது சார் சமூகத்திற்கும் மிகத் தேவையானதும் அத்தியாவசியமானதும் கூட.

எனவே, பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பதவியேற்கப் போகின்ற ஒருவர் வெறுமனே கல்வித் தகைமைகளையும், பொறுப்புக்களையும் மாத்திரம் கொண்டிருப்பது ஏற்கக் கூடியது அல்ல. மாறாக, நிர்வாகம், கடமை தவறாத பண்பு, பக்கச்சார்பின்மை, அதிலும் அதிகமாக சமூகப் பொறுப்புனர்வு உள்ளிட்டவையும், அரசியல் சாரா நேர்மை உள்ளிட்ட தகுதிகளையம் கொண்டிருப்பது அவசியம்.
சமூக பொறுப்புணர்வு என்றது ஒரு துணை வேந்தருக்குரிய அதி மிகுந்த தகுதியாகவும், பொறுப்பாகவும் கருதப்படுகின்றது.
யாழ்ப்பாண, பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் பல கசப்பான அனுபவங்களை, நிர்வாகத்தினரால் மாணவர்களும் அவர் சார் சமூகமும் கண்டிருக்கின்றது.
தற்போதைய துணை வேந்தரான பேராசிரியர் சிறிசற்குணராஜா பொறுப்பேற்ற காலப்பகுதியில், யாழ். பல்கலையில் அமைக்கப்பட்டிருந்த தமிழின அழிப்பு நினைவுத் தூபி இரவோடு இரவாக அழிக்கப்பட்டு பாரிய போராட்டங்கள் வலுப்பெறுவதற்கான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டது.
இது பல்கலைக்கழக சமூகத்தினை அமைதியையும், ஒரு சமூகத்தின் வலியையும், வேதனையையும், உண்மையான போராட்டத்தையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்ததுடன் தமிழ் மக்களுக்கான பாரிய புறக்கணிப்பாகவுமே கருதப்பட்டது.
சமூகப் பொறுப்பு
பின்னரான நாட்களில் பாரிய எதிர்ப்புக்களுக்கு மத்தியில் மீண்டும் தமிழின அழிப்பு நினைவுத் தூபி அமைக்கப்பட்டாலும், அது முதன்முறை அழிக்கப்பட்ட சம்பவம், அழியாத கறையாக யாழ். பல்கலையின் தமிழினம் சார் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது.
மேலும், சிறுபான்மை - பெரும்பான்மை என்று பிளவுப்பட்டு, அதற்கு விலையற்ற மனித உயிர்களை பலியாகக் கொடுத்த ஒரு பூமியில் அந்த இனத்தையே அவமதிக்கும் வகையிலாக இந்த செயற்பாடு அமைந்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அது மாத்திரமின்றி, காலகாலமாக போதிக்கப்பட்டு வந்த இன, பேத வாதம் இல்லாமல் அங்கு கற்கும் மாணவர்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைக்க வேண்டிய மிகப்பெரிய சமூகப் பொறுப்பு பல்கலைக்கழகத்திற்கும், துணை வேந்தர் உள்ளிட்டவர்களுக்கும் உண்டு.
ஆனால் யாழ். பல்கலையில் இடம்பெற்ற இந்த சம்பவம் மற்றுமொரு கறுப்புப் புள்ளியாகவும், விரிசலை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
இப்படி கசப்பான பல அனுபவங்களை கடந்த காலங்களில் யாழ் பல்கலைக்கழகத்தில் காண முடிந்திருந்தது.
இப்படியான நிலையில்தான் தற்போது மீண்டும் துணை வேந்தருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் பல்கலைக்கழக மானியங்களின் அறிவுறுத்தலின் பேரில் சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருவரை தேர்வு செய்யுமாறு பல்கலைக்கழக பேரவைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இறுதி முடிவு ஜனாதிபதியின் வசம் இருப்பினும், இவ்வாறு பல்கலைக்கழக பேரவையால் தேர்வு செய்யப்படப் போகும் தெரிவுகள் இரண்டும், மேற்குறிப்பிட்ட கொள்கை, பொறுப்பு, கடமை உள்ளிட்டவற்றில் இருந்து விலகாதவராகவும், அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு நிர்வாகத்தை மேற்கொள்ளாதவராகவும், அரசியல் மற்றும் அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டவராகவும் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அத்தோடு, கல்வித் தகைமை, வழங்கப்பட்ட பொறுப்புக்கள் என்பதைத் தாண்டி நாளைய ஒன்றிணைந்த இலங்கை சமூகத்தில் பிரிவினையற்ற ஒரு சந்ததியை உருவாக்க வேண்டிய மிகப்பெரிய தலையாய கடமையும் தெரிவு செய்யப்படப் போகும் துணை வேந்தருக்கு உண்டு.
எனவே, கடந்த கால துணை வேந்தர் தெரிவுகளில் ஏற்பட்ட சறுக்கல்களை கடந்து ஒரு நிலையானதும், பொறுப்புமிக்கதும், சமூக அக்கறை உடையதும், பல்கலைக்கழகத்தினை உயர்வான நிலைக்கு எடுத்துச் செல்லக் கூடியதுமான ஒரு துணை வேந்தரை தெரிவு செய்யவேண்டிய தார்மீகப் பொறுப்பும் சவாலும் யாழ். பல்கலைக்கழக பேரவைக்கு உள்ளது.