அநுரவின் ஐ.நா உரை தொடர்பில் புதிய சர்ச்சை..!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறிய ஒரு விடயம் தற்போது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, “ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது, ஆனால் அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது அதனை விட ஆபத்தானது” எனத் தெரிவித்திருந்தார்.
எனினும், இந்தக் கருத்தை ருவாண்டாவின் ஜனாதிபதி பால் ககாமே முன்னரே கூறியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகின்றது.
பொருத்தமான நடவடிக்கை
கடந்த 2019ஆம் ஆண்டு நைஜீரியாவின் அபுஜா நகரில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான மாநாட்டில் போல் ககாமே குறித்த கருத்தை முதன்முறையாக வெளியிட்டிருந்தார்.
அதன்போது அவர் நைஜீரியாவின் பெண் எழுத்தாளரான Ngozi Okonjo-Iweala என்பவர் எழுதியுள்ள Fighting Corruption Is Dangerous: The Story Behind the Headlines (2018) எனும் நூல் குறித்து குறிப்பிட்டு, குறித்த எழுத்தாளர் இன்னுமொரு நூலை எழுத வேண்டும் என்றும் அதில் ''ஊழலுக்கு எதிராக போராடாமல் இருப்பது அதனை விட ஆபத்தானது'' (Not Fighting Corruption Is Even More Dangerous) எனும் கருத்தை எழுத்தாளர் உள்ளடக்க வேண்டும் என்றும் ககாமே வலியுறுத்தியிருந்தார்.
ககாமேயின் குறித்த கருத்து ''ஊழலுக்கு எதிரான போர் ஆபத்தானது , ஆனால் அதற்காக போராடாமல் இருப்பது அதனை விட ஆபத்தானது'' எனும் தொனிப்பொருளில் உலகப் புகழ்பெற்றது.
இந்நிலையில், இதே விடயத்தை கூறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அதனை ஒரு மேற்கோள் என கூறவில்லை என சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது வேறொரு நாட்டு தலைவருடைய மேற்கோள் என்பதை பொறுப்புணர்வுடன் ஒப்புக்கொள்வது பொருத்தமான நடவடிக்கை என சமூக ஊடக பயனாளர்கள் விமர்சிக்கின்றனர்.
மேலதிக தகவல் - அனதி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



