கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கான விசேட அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் விமான நிலையத்திற்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
விமானச் சேவைகள்
அதற்கமைய, அதன் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் மேலாண்மையுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளார்.

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், தற்போதுள்ள முதலாவது முனையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூலம் புறப்படும் மற்றும் வருகை தரும் பகுதிகள், செக்இன், விமானத்தில் ஏறுதல், குடிவரவு குடியகல்வு மற்றும் டிரான்ஸிட் பகுதிகள் நவீனமயமாக்கப்படவுள்ளன.
குறித்த அபிவிருத்தித் திட்டம் நிறைவடைவதன் மூலம், தற்போதைய கொள்ளளவிற்கு மேலதிகமாக ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் மேலதிக பயணிகளை கையாளும் திறன் விமான நிலையத்திற்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 மாத காலத்திற்குள் நிறைவு
அதேபோல், விமான நிலையத்தின் நீண்டகால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, நவீன வசதிகளை கொண்ட இரண்டாவது முனையத்தின் கட்டுமானப் பணிகளை இவ்வருடம் நவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட திட்டம் 30 மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அபிவிருத்திப் பணிகளினதும் முதன்மை நோக்கம், சேவைத் திறனையும் தரத்தையும் மேம்படுத்தி, கட்டுநாயக்க விமான நிலையத்தை உலகத் தரம் வாய்ந்த நவீன சர்வதேச விமான நுழைவாயிலாக உயர்த்துவதாகும் என அமைச்சர் இங்கு வலியுறுத்தியுள்ளார்.