புதிய அமைச்சரவையில் ரணில் மற்றும் பொதுஜன பெரமுன
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை ஏற்க போவதில்லை என நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதான எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அமைச்சு பொறுப்புகளை ஏற்க மறுத்த அரசியல் கட்சிகள்
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில தலைமையிலான 10 கட்சிகள், தமிழத் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தனித்தனியாக ஊடக சந்திப்புகளை நடத்தி, அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை ஏற்க போவதில்லை அறிவித்துள்ளன.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மக்களின் நலன்கள் மற்றும் தற்போதைய தேசிய நெருக்கடியை தீர்ப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படும் கடமை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என விரும்புவதாகவும் அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக பிரதமர் கட்டாயம் பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ராஜபக்சவினர் மற்றும் மொட்டுக் கட்சியை நம்பும் ரணில்
இவ்வாறான நிலைமையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது கட்சி எவ்வித ஆதரவையும் வழங்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பலம் இல்லை எனவும் அவர் ராஜபக்சவினர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களையே நம்பியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார சீரழிவுக்கு ரணிலும் பொறுப்பு
இதேவேளை இலங்கையின் பொருளாதார சீரழிவுக்கு கூடுதல் பொறுப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு இருப்பதாகவும் அவர் ஏற்கனவே பிரதமராக பதவி வகித்த போது நடந்த மத்திய வங்கியின் பிணை முறி மோசடி இந்த பொருளாதார அழிவுக்கு காரணம் எனவும் மக்கள் விடுதைலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கும் கொடுக்கல், வாங்கல்கள் தற்போது ஆரம்பித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி எந்த சந்தர்ப்பத்தில் அப்படியான யோசனைகளை ஏற்றுக்கொள்ளாது.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மக்கள் விடுதலை முன்னணி பணியாற்றாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க தலைமையில் கீழ் பணியாற்ற போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அறிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் வழங்கப்படும் எந்த அமைச்சு பொறுப்பையும் தமது கட்சி ஏற்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உருகி உருகி மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய மெசேஜ்... வெளிச்சம் போட்டு காட்டிய ஜாய் கிறிஸ்டில்லா Manithan