சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை: இந்திய இழுவை படகுகளை தடுப்பதற்கு புதிய அணுகுமுறை
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய இழுவை படகுகளை தடுப்பதற்கு புதிய அணுகுமுறையாக, கடும் நடவடிக்கைகளை எடுக்க மீன்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கை இலங்கை கடற்பரப்பில் அவர்களின் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை தடுக்கும் என்று தாம் நம்புவதாக, மீன்பிடி மற்றும் நீரியல் வளத் துறை பணிப்பாளர் எஸ்.ஜே.கஹவத்த தெரிவித்துள்ளார்.
சிறைத்தண்டனைக்கு பின் விடுவிப்பு
தற்போது, கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள், நீதிமன்றங்களால் இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் புதிய சட்டத்தின்படி, படகுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
ஒரு வெளிநாட்டு படகு கைப்பற்றப்பட்டால், அந்த குறிப்பிட்ட நாட்டின் உயர்ஸ்தானிகரத்தின் மூலம் உரிமையாளருக்கு இலங்கை நீதிமன்றால், மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் வழங்கப்படும் என மீன்பிடி மற்றும் நீரியல் வளத் துறை பணிப்பாளர் எஸ்.ஜே.கஹவத்த தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கையுடன் விடுவிப்பு
இதில் ஒருகட்டமாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி கைது செய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார்.
எனினும் அவர் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் திகதியும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தேவையான ஆவணங்களுடன், படகு உரிமையாளர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் ஊடாக அழைப்பாணை அனுப்புமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



