வடமாகண மக்களை நாம் என்றும் வெறுப்பதில்லை: சந்திரகாந்தன் ஆதங்கம்
அடைய முடியாத இலக்குகளுக்காக எம்மை மோத விட்டு அழிய விட்டது மட்டுமில்லாமல் தங்களது செயல்களை இன்னும் நியாயப் படுத்தும் இந்த சித்தாந்தக்காரர்களை மட்டுமே நாம் வெறுக்கின்றோமே தவிர நல்லூர் கந்தனையோ வடமாகண மக்களையோ என்றும் வெறுப்பதில்லை என இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை(17.07.2023) மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை இவர்கள்தான் வரையறுத்தவர்கள், இவர்களது மூதாதையர்கள் போல் பேசுகின்றனர். தங்களது இருப்புக்காகவும், கட்சிக்காகவும், மட்டுமே பேசினார்கள்.
படித்த சமூகத்தின் செயற்பாடு முக்கியம்.
எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி உண்மையாக நேசிக்கும் மக்கள் நலன் சார்ந்த அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கருத்தில் கொள்ளாது திட்டமிடப்படாத செயற்பாடுகளே இவர்களின் நடவடிக்கையாகும் கிழக்கு மாகாண மக்களின் சவால்களை எதிர்கொள்ள படித்த சமூகத்தின் செயற்பாடு எவ்வளவு முக்கியம் என நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் மக்களது வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் சிந்தனைகளை பாரம்பரிய பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட இந்த மண்ணில் கட்டி எழுப்ப வேண்டியதே முக முக்கியமான வேலை ஆகும்.
உற்பத்தி செய்யக்கூடிய ஏற்றுமதி பயிர்களையே நாம் பயிரிட வேண்டிய தேவை உள்ளது பெரிய அளவு பொருளாதாரத்தை சிந்தித்து சிறிய அளவு பொருளாதாரத்தை நாம் இழந்து வருவது உண்மையாகும்.
அடைய முடியாத இலக்குகளுக்காக எம்மை மோத விட்டு அழிய விட்டது மட்டுமில்லாமல். தங்களது செயல்களை இன்னும் நியாயப்படுத்தும் இருமாப்புடன் கூடிய இந்த சித்தாந்த பிழையான வழிப்படுத்தலை தான் நாம் வெறுக்கிறோமே தவிர நல்லூர் கந்தனையோ வடமாகண மக்களையோ நாம் என்றும் வெறுப்பதில்லை.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
