பெரும் தாக்குதல் வரப்போகிறது...ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்னரே நெதன்யாகுவுக்கு நேரடியாக தகவல் வழங்கிய UAE ஜனாதிபதி
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு சுமார் ஒன்றரை வாரங்களுக்கு முன்னரே, ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் யஹ்யா சின்வார் பாரிய தாக்குதலொன்றைத் திட்டமிட்டு வருவதாக ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரடியாக எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ஊடகமான ‘ஹாரெட்ஸ்’ மேற்கொண்ட விசாரணையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய தாக்குதல்
சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது, காசாவில் இருந்து “சில்சால்” எனப்படும் மிகப்பெரிய தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பின் சயீத் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் பிராந்தியத்தில் இரத்தக்களரியையும் ஸ்திரமின்மையையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்தத் தாக்குதல் ஆபிரகாம் ஒப்பந்தங்களையும் பாதிக்கக்கூடும் என பின் சயீத் கவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது. எனினும், நெதன்யாகு இந்த எச்சரிக்கைக்கு ஒப்பீட்டளவில் அமைதியாக பதிலளித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமாஸ் மேற்கு கரையில் நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கலாம் என தான் கருதுவதாக நெதன்யாகு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த இந்த முக்கியமான எச்சரிக்கை குறித்து ஷின் பெட், மொசாட் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நெதன்யாகு அறிவிக்கவில்லை என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்
பின் சயீத் பின்னர் இந்த உரையாடல் குறித்து சிஐஏ இயக்குநர் வில்லியம் ஜே. பேர்ன்ஸிடமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, 2023ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இஸ்ரேலின் ஷின் பெட் மற்றும் ஹமாஸ் இடையே இரகசிய நேரடி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு இரு தரப்பும் நெருங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த ஒப்பந்தம் இஸ்ரேல் தரப்பில் தாமதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக காத்திருந்த சின்வார், 2023 செப்டெம்பரில் இடைத்தரகர் ஊடாக தான் “சில்சால்” எனப்படும் தாக்குதலைத் தயாரித்து வருவதாக எச்சரித்ததாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

அந்தத் தாக்குதலை “மிகப்பெரிய ஆச்சரியம்” மற்றும் “பயங்கரமான நடவடிக்கை” என அவர் விவரித்ததாகவும் கூறப்படுகிறது. செப்டெம்பர் 15ஆம் திகதி சின்வாரின் எச்சரிக்கை ஷின் பெட்டை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அப்போதைய ஷின் பெட் தலைவர் ரோனென் பார், நெதன்யாகுவுக்கு அது குறித்து விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற பாதுகாப்புக் கூட்டத்தில், இஸ்ரேல் “மோதலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது” என ரோனென் பார் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் எதிர்வினை
காசா மற்றும் மேற்கு கரையில் தாக்குதல் அல்லது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. எனினும், அந்தக் கூட்டத்தில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்பின்னர், எகிப்திய புலனாய்வுத் தலைவர் அப்பாஸ் கமெலும் ஹமாஸ் “வழக்கத்திற்கு மாறானதும் பயங்கரமானதுமான நடவடிக்கை” ஒன்றைத் திட்டமிடுவதாக நெதன்யாகுவை எச்சரித்ததாக கூறப்படுகிறது. காசா நிலைமையை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நெதன்யாகு அவரிடம் தெரிவித்ததாகவும் அறிக்கை கூறுகிறது.

இதனையடுத்து, 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி அதிகாலை 6.29 மணியளவில் ஹமாஸின் தாக்குதல் ஆரம்பமானது. இந்தத் தாக்குதலின்போது சுமார் 251 பேர் கடத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ‘ஹாரெட்ஸ்’ வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நெதன்யாகுவின் அலுவலகம் முற்றிலும் மறுத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் நெதன்யாகு குறித்த காலப்பகுதியில் பேசவில்லை என்றும், அவரிடமிருந்து எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் இஸ்ரேலில் அரசியல் ரீதியாகவும் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னெட், ஐக்கிய அரபு அமீரக மற்றும் எகிப்திய தரப்புகளிடமிருந்து எச்சரிக்கைகள் கிடைத்தபோதும் நெதன்யாகு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஒக்டோபர் 7 பேரழிவுக்கு நெதன்யாகு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.