ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தியது இஸ்ரேல்
இருதரப்புக்கும் இடையே கடுமையான ஏவுகணைத் தாக்குதல்கள் பரிமாறப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
எனினும், இதனை அவர் ஒரு நிரந்தர 'போர்நிறுத்தம் என குறிப்பிடவில்லை. தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட பின்னர் நெதன்யாகு அறிக்கை ஒன்ற வெளியிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில், தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏனெனில், டெஹ்ரானில் உள்ள பயங்கரவாத ஆட்சி அதிகாரத்தின் மீது நாம் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் அவர்கள் நம்மைத் தாக்குவதை நிறுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

ஈரானின் பயங்கரவாத அரசு மீண்டும் நம்மைத் தாக்கும் தவறைச் செய்தால், நாம் மிகக் கடுமையான பலத்துடன் அதற்குப் பதிலடி கொடுப்போம்" என நெதன்யாகு தனது வீடியோ அறிக்கையில் எச்சரித்துள்ளார். லெபனான் மோதல்களுடன் ஈரானின் எதிர்வினையை இணைத்து, டெஹ்ரான் நிர்வாகம் ஒரு 'புதிய சமன்பாட்டை' உருவாக்க முயல்வதாக நெதன்யாகு சாடியுள்ளார்.
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரானின் ஆதரவு பெற்ற ஒரு குழு என்பது குறிப்பிடத்தக்கது.
லெபனான் மற்றும் ஈரானியப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் எனவும், அதற்கு நாம் பதிலடி கொடுக்க மாட்டோம் எனவும் அவர்கள் நினைத்தார்கள். அது ஒருபோதும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அந்த முயற்சி இனியும் நடக்காது எனவும் தனது பதவிக்காலத்தில் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் நெதன்யாகு திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும், "நமது எதிரிகளுக்கு எதிராகச் செயல்படுவதற்கான இஸ்ரேலின் சுயபாதுகாப்பு உரிமையில் நான் உறுதியாக நிற்கிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளர்ர்.
இதேவேளை, ஈரானுக்கு எதிராகப் பெரிய அளவிலான பதிலடித் தாக்குதலைத் தொடுப்பதைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் ட்ரம்பும் நெதன்யாகுவும் தொலைபேசி வாயிலாக இரண்டு முறை இது குறித்துப் பேசியுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.