எவரெஸ்ட் சிகரத்தில் 6 நாட்களாகக் காணாமல் போன நேபாள வழிகாட்டி உயிருடன் மீட்பு
எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு காணாமல் போய், இறந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா வழிகாட்டி ஒருவர், பனிப்பாதையில் தனியாக ஊர்ந்து பேஸ் கேம்பை நோக்கி வந்தபோது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
52 வயதான தாவா ஷெர்பா என்ற அந்த வழிகாட்டி, கும்பு பனிப்பொழிவு பகுதியிலுள்ள பனிச்சரிவுகளில் தனியாகக் கீழ்நோக்கி ஊர்ந்து வந்துகொண்டிருந்தபோது, தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினரால் வியாழக்கிழமை காலை கண்டறியப்பட்டார்.
அவர் பத்திரமாக மீட்கப்பட்டு, உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்ட பின்னர், மீட்பு ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் காத்மாண்டுவிலுள்ள ஹாம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இறுதிச் சடங்கு
கடந்த மே 29 அன்று மலையிலிருந்து இறங்கும்போது கடைசியாகப் பார்க்கப்பட்ட தாவா, பேஸ் கேம்பை வந்தடையவில்லை. அவரைத் தேடும் பணிகள் தாமதமாகத் தொடங்கப்பட்டதாலும், அனுப்பப்பட்ட மீட்பு ஹெலிகாப்டர்களால் அவரைக் கண்டுபிடிக்க முடியாததாலும், அவர் உயிருடன் திரும்புவார் என்ற நம்பிக்கையை அவரது குடும்பத்தினர் முழுமையாக இழந்திருந்தனர்.

இதனால், அவரது மனைவி தாமு ஷெர்பா மற்றும் மகள் மெண்டோ லாமு ஷெர்பா ஆகியோர் அவருக்குரிய பல நாட்கள் நீடிக்கும் இறுதிச் சடங்குகளைத் தொடங்கி, அதன் இரண்டாம் நாளில் இருந்தனர்.
உள்ளூர் செய்திகள் மூலமும், தெரிந்த நபர் ஒருவர் மூலமும் தாவா உயிருடன் இருக்கும் தகவல் கிடைத்தபோது அவர்களால் அதை நம்ப முடியவில்லை என்றும், பின்னர் புகைப்படங்களைச் சரிபார்த்த பின்னரே உறுதிசெய்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவரது மகள் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட மலையேறுபவர்களும் அவர்களின் வழிகாட்டிகளும் எவரெஸ்ட் சிகரத்தை எட்டியுள்ளனர், இது வரலாற்றிலேயே மிகவும் பரபரப்பான மலையேற்றக் காலமாகக் கருதப்படுகிறது. இந்த நடப்பு சீசனில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடிப்படை வசதிகளின்றி இயங்கிய இல்லம்..! 12 பேர் உயிர் பலி - பணிப்பாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan