நேபாளத்தில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 600 உயிர்களை காப்பாற்ற போராடும் மீட்புக்குழுவினர்
நேபாளத்தின் திரிசூலி ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள திரிசூலி-3ஏ நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில், சேறு மற்றும் சகதி நிறைந்த பகுதிக்குள் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை உயிரோடு மீட்கும் தீவிர நடவடிக்கைகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திங்கட்கிழமை வரை நீடித்த இந்த மீட்புப் பணியில், மலைப் பகுதியை வெடிவைத்துத் தகர்த்துச் சுரங்கத்தினுள் காற்றைச் செலுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளதுடன், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3,925 ஆகப் பதிவாகியுள்ளது.
மீட்புப் பணிகள்
இதில் 592 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். காணாமல் போனவர்களில் ஏழில் ஒருவர் நீர்மின் நிலையத் தொழிலாளி எனக் கருதப்படும் நிலையில், இதுவரை நீர்மின் நிலையங்களிலிருந்து 279 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.

நேபாள மற்றும் சீன இராணுவத்தின் கூட்டுத் தலைமையில், இந்தியா, கொரியா மற்றும் அவுஸ்திரேலிய நிபுணர்களின் பங்களிப்புடன் இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுரங்கத்திற்குள் பிராணவாயு அமைப்பு உள்ளதால் தங்கள் உறவினர்கள் உயிரோடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். அதேவேளை, தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் தங்களது நம்பிக்கை குறைந்து வருவதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதுவரை 11,379 பேர் ஒட்டுமொத்தமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் 11 நீர்மின் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.