நேபாளத்தில் பாரிய விபத்துக்குள்ளான விமானம்! 40 உடல்கள் மீட்பு (Video)
நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காஸ்கி மாவட்ட உதவி தலைமை அதிகாரி குருதத்தா தாகல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மீட்புப் பணி வேகமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை விமானம் தரையிறங்க 10 முதல் 20 வினாடிகள் மட்டுமே இருந்ததாக போக்கரா சர்வதேச விமான நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் 72 பேருடன் விமானமொன்று ஓடுபாதையில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
பழைய விமான நிலையத்திற்கும் பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் மொத்தம் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணி
எவ்வாறாயினும், மீட்புப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் சில உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளத்தில் உள்நாட்டு விமான சேவையை முன்னெடுக்கும் யெடி எயார்லைன்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.