சிறைச்சாலைக் கலவரம் மொட்டு கட்சியின் அரசியல் சதி: சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி நாமல் ராஜபக்சவுக்கு வேண்டப்பட்டவர்....
நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் மிகவும் முக்கியமான மற்றும் ஆபத்தான கதை ஒன்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது பயங்கரமான அரசியல் சதித்திட்டம் என்பது ஆரம்ப நிலை விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தை தூண்ட மொட்டு கட்சி சம்பந்தப்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது சம்பவம் குறித்து ஒரு குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடக்கின்றன. குற்றப்புலனாய்வு திணைக்களமும் (CID) விசேட விசாரணைகளை நடத்தி வருகிறது.
யார் என்ன கூறினாலும், சிறைச்சாலைக்குள் ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியாகியிருந்தது. அந்தச் சதியின் ஒரு நீட்சிதான் இந்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்.
சம்பவங்களின் பின்னணி
5 ஆம் திகதி மோதல் கைதிகளுக்கு இடையே மட்டுமே நடந்த ஒரு மோதலாகும். சிறைச்சாலை அதிகாரிகள் தலையிட்டு அன்றைய தினமே இந்த மோதலைத் தணித்து வைத்தனர்.
6 ஆம் திகதி காலை ஜெயிலர் கசுன் லக்சித்த காலையில் கைதிகள் உணவு வரிசையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு அவர் எந்தவொரு காரணமும் இன்றி ஒரு கைதியை கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கைதிகள், முதல் நாள் நடந்த சம்பவத்திற்காகவே அதிகாரி பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கைதிகள் தன்னைச் சூழ்ந்துகொள்வதை அவதானித்த கசுன் லக்சித்த, உடனடியாக அங்கிருந்து நழுவி, சிறைச்சாலை வாசலால் வெளியேறி, தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கொழும்புக்குத் தப்பியோடியுள்ளார்.
குறித்த சிறை அதிகாரியான கசுன் லக்சித்த கடந்த 2016 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச விளக்கமறியல் சிறையிலிருந்த போது, அவருக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்தவர்.
அன்றைய சிறைச்சாலை காவலராக இருந்த இதே கசுன் லக்சித்த தான். நாமல் ராஜபக்சவிற்கு செய்த அந்த விசுவாசமான பணிவிடைக்கு கைமாறாக, பின்னர் நாமல் ராஜபக்சவினால் இவர் 'ஜெயிலர்' ஆக பதவியுயர்த்தப்பட்டார்.
மோதலை திசைதிருப்பியவர்
கைதிகளுக்குள் இருந்த மோதலை, அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு இடையிலான மோதலாக மாற்றியது கசுன் லக்சித்தவையே சாரும்.
மோதல் தீவிரமடைந்த போது, சிறைச்சாலை பொலிஸுக்குப் பொறுப்பாகவிருந்த ஜெயிலர் "தட்ட மஹேஷ்" மஹேஷ் லங்காத்திலக்க வந்துள்ளார்.
அங்கு மோதல் நடந்துகொண்டிருந்த போது, மற்றொரு அதிகாரி மஹேஷிடம் வந்து, "முட்டாள்தனமாக எதையும் செய்ய வேண்டாம்,சிறை பொலிஸாரை ஆயுதமேந்திய கைதிகள் மத்தியில் அனுப்ப வேண்டாம்" என்று தடுத்துள்ளார்.

ஆனால் மஹேஷ், "நீ வாயை மூடிக்கொண்டு இரு, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு, சிறைச்சாலை பொலிஸ் குழுவை 7 பேர் ஒரு பக்கமாகவும், ஏனையோரை மறு பக்கமுமாகப் பிரித்து வன்முறைக் கைதிகள் மத்தியில் அனுப்பியுள்ளார்.
அதிகாரிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, மஹேஷ் லங்காத்திலக்க தான் அணிந்திருந்த நீல நிற டி-ஷர்ட்டைக் கழற்றி எறிந்துவிட்டு, ஒரு வெள்ளை நிற டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு, மரத்தடிக்குச் சென்று தொலைபேசி அழைப்புகளை எடுத்துக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
இலங்கை சிறைச்சாலை வரலாற்றில் எத்தனையோ மோதல்கள் நடந்துள்ளன. ஆனால், கைதிகளைத் தூண்டிவிட்டு அதிகாரிகளைப் படுகொலை செய்ய வழிவகுத்த இந்தச் சம்பவம் முற்றிலும் ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் சதியாகும்.