நோயாளர் காவு வண்டியில் பிரிந்த உயிர்: செட்டிகுளம் வைத்தியசாலையின் அசமந்த போக்கு
வவுனியா(Vavuniya) - செட்டிகுளம் வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லப்பட்டவர் உயிரிழந்தமையினால் வைத்தியசாலையின் அசமந்த போக்கு தொடர்பில் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
செட்டிகுளம் வைத்தியசாலையில் இருந்து நோயாளியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர் காவு வண்டியை இடைநடுவே மீள செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அழைத்த நிலையில், அதில் இருந்த நோயாளி மரணமடைந்தமையால் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் அசமந்த போக்கு
மேற்படி சம்பவமானது நேற்றைய தினம்(26.06.2024) இடம்பெற்றுள்ளது.
செட்டிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான திருநாவுக்கரசு ஆனந்தராசா என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) நெஞ்சுவலி காரணமாக செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, அவரது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையினர் நோயாளியை உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அறிவித்திருந்ததாக இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை (26) பிற்பகல் 3 மணியளவில் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து அவசர நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த நோயாளியை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நோயாளர் காவு வண்டி புறப்பட்டு ஏறக்குறைய 15 கிலோமீற்றர் பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில் மேலதிகமாக மேலும் ஒருவரை ஏற்றிச்செல்ல இருப்பதாக கூறி குறித்த நோயாளர் காவு வண்டியை மீண்டும் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு திரும்ப அழைத்துள்ளனர்.
தட்டான்குளத்தில் பயணித்துக் கொண்டிருந்த நோயாளர் காவு வண்டி மீள செட்டிகுளம் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் ஏற்கனவே நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லப்பட்டு திருப்பி கொண்டு வரப்பட்ட நோயாளி திருநாவுக்கரசு ஆனந்தராசா என்பவர் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையிலே உயிரிழந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை வழங்க தமாதமானதாலேயே உயிரிழந்துள்ளார் என உறவினர்களும் அப்பிரதேச மக்களும் வைத்தியசாலை மீது குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், இறந்தவரின் உடல் இன்றைய தினம் (27) வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மரணவிசாரணை அதிகாரி கருணாநிதி ஹரிபிரசாத் அவர்களின் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்ற பின்னர், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் செட்டிகுளம் வைத்தியசாலை பகுதி சற்று பதற்ற நிலையில் காணப்படுவதுடன் இறந்தவரின் உறவினர்கள் கிராம மக்கள் வைத்தியசாலைக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றையும் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |