நெடுங்கேணி - ஒட்டுசுட்டான் வீதியில் தொலைந்து போன 1.7 km தூரம்! நடந்தது என்ன..
வீதிகளில் உள்ள தூரங்களை இனம் காண நிறுவப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளில் சரியான தகவல்களை குறிப்பிடுதல் நன்றாகும்.
வீதிகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் குழப்பமடையும் வகையில் அவை இருப்பது கவலையளிக்கும் விடயமாகும். இந்த குழப்பம் வாடகை வாகனங்களை பயன்படுத்துவோருக்கும் வாடகை வாகனங்களை வைத்திருப்போருக்கும் பேருந்து நடத்துனர் மற்றும் பயனிகளுக்கும் பெரும் சிரமங்களை ஏற்படுத்துவதாக அவர்கள் குறிப்பிடுகின்றமையும் நோக்கத்தக்கது.
இது தொடர்பாக வவுனியா வீதியபிவிருத்தி திணைக்களத்திற்கு சுட்டிக்காட்டிய போது அதனை கருத்திலெடுத்து உடன் மாற்றங்களை ஏற்படுத்தி சீர் செய்தனர் என நெடுங்கேணியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.
நெடுங்கேணி சந்தியில் உள்ள தூரங்காட்டிகள்
நெடுங்கேணியில் உள்ள ஒரேயொரு வட்டச் சந்திப்பு இரு பிரதான வீதிகளின் இணைவினால் தோன்றியது.
தண்ணீரூற்று - புளியங்குளம் (B296) வீதியின் 19 km கல்லில் ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி (ழஸழஜ) வீதி சந்தித்துக்கொள்கின்றது.
தண்ணீரூற்று - புளியங்குளம் வீதியில் தூரம் புளியங்குளத்திலிருந்து குறிக்கப்படுகிறது. புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணிச் சந்தி 19 km ஆகும்.
ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதியின் தூரம் ஒட்டுசுட்டானில் இருந்து குறிக்கப்படுகிறது.
தண்ணீரூற்றில் இருந்து வருபவர்கள் வட்டச்சந்தியை அடையும் முன் தூரங்காட்டிகளை அவதானிக்கலாம்.
அது போலவே புளியங்குளத்திலிருந்து வருவோரும் வட்டச் சந்தியை அடையும் முன்னர் தூரங்காட்டிகளை அவதானிக்கலாம்.
இங்கே கவனிக்க வேண்டியது நெடுங்கேணியில் இருந்து ஒட்டுசுட்டானுக்குள்ள தூரமாகும். இரு தூரங்காட்டிகள் இரு புறங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. இரண்டும் வெவ்வேறு தூரங்காட்டிகளை சுட்டிக்காட்டியவாறு நிற்கின்றன.
நெடுங்கேணியில் இருந்து ஒட்டுசுட்டானுக்குள்ள தூரமாக ஒரு தூரங்காட்டியில் 9 km எனவும் மற்றைய தூரங்காட்டியில் 10.7 km எனவும் தூரங்களை சுட்டிக் காட்டியுள்ளனர்.
இரு தூரங்காட்டிகளின் தகவல்களுக்கமைய ஒரு புள்ளியில் ( நகரத்தில்) இருந்து மற்றைய புள்ளிக்குள்ள தூரமாக இரண்டு அளவுகளிலிருந்து 1.7km தூரம் தொலைந்து போயுள்ளது ஆச்சரியமானது என மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையினால் வாடகை கட்டணங்களை அறவிடும் போது சிக்கல்நிலை தோன்றுவதாக வாடகை வாகன உரிமையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
ஒட்டுசுட்டான் வட்டச் சந்தியில் அவதானிப்பு
முல்லைத்தீவு - மாங்குளம் பிரதான வீதியில் (A34) ஒட்டுசுட்டான் தான்தோன்றிசுவரர் ஆலயத்திற்கு முன்னுள்ள வட்டச்சந்தியை ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதி A34 வீதியுடன் இணைவதால் ஆக்குகின்றது.
இந்த சந்தியில் இருந்து நொடுங்கேணிச் சந்தி 11km என தூரங்காட்டியில் குறிக்கப்பட்டிருப்பதனையும் அவதானிக்கலாம்.
இது வீதியமைப்பு திட்டமிடலில் அறிவித்தல் பலகைகளை வைக்கும் போது ஏற்பட்ட தவறாக இருக்கலாம் என கருத்திட்ட சிலரும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெடுங்கேணி சந்தியில் முதலில் 10.7 km குறிக்கப்பட்டிருந்த தூரங்காட்டியே இருந்ததாகவும் பின்னரே 9km தூரங் காட்டியை நிறுவி இருந்தனர் என்றும் வாகனச் சாரதிகள் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
உரிய தரப்பினர் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கருத்துக்களை வழங்கிய பொதுமக்கள் எல்லோரிடமும் பொதுப்பட கருத்திருந்தமையையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாக அமையும்.
வீதி அபிவிருத்தி பொறியியலாளரின் கருத்து
வவுனியா வீதியபிவிருத்தி திணைக்களத்தைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவருடன் இந்த விடயம் பற்றி பேசும் போது, அவ்வாறு அமைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதியின் ஒரு பகுதி வவுனியா மாவட்டத்திற்கும் மற்றய பகுதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் உரியதாக அமைகின்றது.
நெடுங்கேணி சந்தியில் இருந்து 9.25 km தூரம் வவுனியா மாவட்ட பொறியியல் பிரிவுக்குரியதாகும். ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதி மொத்தத் தூரம் 10.86km ஆகும். மீதமுள்ள தூரம் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத்திகுரியது. தூரங்காட்டிகள் கொழும்பில் இருந்து தான் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதனால் ஏதேனும் தவறுகள் நடந்திருக்கலாம். அவை மீளவும் ஒரு தடவை தாம் அவதானிப்புக்களை மேற்கொண்டு சரி செய்வதாகவும் பொருத்தமற்ற தூரங்காட்டிகள் இருப்பின் அவற்றை அகற்ற தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
வவுனியா வீதியபிவிருத்தி திணைக்களத்தைத் தொடர்பு கொண்ட போது திருப்திகரமாக தொடர்புகளை பேணி பதிலளித்திருந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்தினரின் பாராட்டத்தக்க செயற்பாடு
தாம் சுட்டிக்காட்டிய போது உடன் கவனமெடுப்பதாக கூறி சில தினங்களில் அதனை கருத்திலெடுத்து மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தனர்.
இப்போது ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதி நெடுங்கேணியில் இருந்து 10.7km என்ற ஒற்றை அளவீட்டில் தூரங்காட்டி இருக்கின்றது.
தான் சுட்டிக்காட்டியதற்கு அவர்கள் மதிப்பளித்திருப்பதாகவும் அதனால் தான் மகிழ்ச்சியடைவதோடு அவர்களுக்கு நன்றியுரைப்பதாகவும் அந்த ஆசிரியர் மேலும் கூறியதோடு.
இது போல் பொருத்தமற்ற யாதேனும் செயற்பாடுகளை அவதானிக்கும் போது ஒரு தடவை உரிய தரப்பினரிடம் அந்த பொருத்தமற்ற விடயங்களை சுட்டிக்காட்டி சீர்செய்யும்படி கேட்டுக்கொள்ள முயல்வது பொருத்தமான மாற்றங்களைச் ஏற்படுத்த உதவியாக அமையலாம் எனவும் தன் கருத்தினை பதிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது.
அலுவலர்களோடு பொதுமக்களும் இணைந்து செயலாற்றும் போது பணிகள் இலகுவாக்கப்படுவதோடு திருப்திகரமாக அமையும் என தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.





தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
