நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்: சஜித்
"நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலவாக்கலையில் இன்று நடைபெற்றது.
எதிர்ப்பு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக தலவாக்கலை நகருக்கு பூண்டுலோயா வழியாகவும், நுவரெலியா வழியாகவும், ஹட்டன் வழியாகவும் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களுடைய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வண்ணம் தலவாக்கலை நகரை வந்தடைந்தனர்.
அங்கு பிரதான சுற்று வட்டத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம் மயில்வாகனம் உதயகுமார், வேலுகுமார் ஆகியோர் கூட்டம் நடைபெற்ற பிரதான விளையாட்டு மைதானத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றடைந்தனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"வங்குரோத்தடைந்த சில அரசியல்வாதிகள், தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக மீண்டும் இனவாதத்தையும், மதவாதத்தையும் கையில் எடுத்துள்ளனர். இனம், மதம், அரசியல் பேதங்களை மறந்துதான் மக்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர். எனினும், மக்களின் போராட்டத்துக்கு முத்திரை குத்தப்படுகின்றது.
எனவே, இனவாதத்தையும், மதவாதத்தையும் தோற்றுவிப்பவர்களை, தோற்கடிப்பதற்காக நாம் அறவழியில் எழுந்து நிற்போம். இது எமது நாடு, நாட்டு வளங்களை, சொத்துகளைக் காக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.
எனவே, தேசிய சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்காத வகையிலேயே போராட்டங்கள் இடம்பெற வேண்டும். ஒழுக்கம் உள்ள மக்கள் என்ற வகையில் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் அதனைப் பின்பற்றுகின்றனர் என உறுதியாக நம்புகின்றேன்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள். பயிரிடப்படாத நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும். சிறு தேயிலைத் தோட்டங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், ஏற்றுமதி அதிகரிக்கும், ஏற்றுமதி அவ்வாறு அதிகரித்தால் வருமானம் கூடும். அந்த வழிமுறையை நாம் கையாள்வோம். அதேபோல லயன் யுகத்துக்கும் முடிவு கட்டப்படும்.
மலையக மக்களின் எழுச்சிக்காகத் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை நாம் முன்வைத்துள்ளோம்.
தனி நபரிடம் அதிகாரம் இருக்கக்கூடாது. சர்வாதிகார ஆட்சியும்
வேண்டாம். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை இல்லாதொழிக்க தேவையான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.