கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து! காணாமல்போன கடற்படை அதிகாரியை தேடும் பணி தீவிரம்
மொரட்டுவை, அங்குலானை கடற்கரைக்கு தொலைவில் கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில் காணாமல்போன கடற்படை அதிகாரியை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்வதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை வழக்கமான ரோந்துப்பணியை முடித்துவிட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கை
இதனையடுத்து அப்பகுதி கடற்றொழிலாளர்கள்,இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் அங்குலானை பொலிஸ் இணைந்து நடத்திய மீட்பு நடவடிக்கையில், 12 கடற்படை வீரர்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் காணாமல்போயுள்ளார்.

இந்நிலையில், மாயமான கடற்படை அதிகாரியை தேடும் பணி இன்று (17) மூன்றாவது நாளாக தொடர்வதுடன், இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு காணாமல்போனவர், பொரலஸ்கமுவ, வெரஹேரவை சேர்ந்த கடற்படை லெப்டினன்ட் உதயப்பிரியா ஆவார்.
இதற்கிடையில், இலங்கை கடற்படையின் சிறப்பு குழுக்களின் உதவியுடன், சேதமடைந்த கடற்படை அதிவேகத் தாக்குதல் படகை மீட்கும் பணிகள் நேற்று (16) தொடங்கியுள்ளன.
சீரற்ற வானிலையினால் தொடரும் கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்றும் படகை மீட்கும் நடவடிக்கையை கடினமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.