கடற்றொழிலாளரை முழங்காலில் வைத்து தாக்கிய கடற்படை அதிகாரி - பொலிஸாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மட்டக்களப்பு - செட்டிபாளையம் கடற்கரை பகுதியில் கடற்றொழிலாளர் ஒருவரை முழங்காலில் வைத்து தாக்கியதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரி ஒருவரை, ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய, முறையான விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவியல் கோவை 1994ஆம் ஆண்டு 22ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் (சித்திரவதை தடுப்பு சட்டம்) முதலாம் பிரிவின்படி, சாட்சிகள் மற்றும் சான்று பொருட்களுடன் எதிர்வரும் 22ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடற்படை அதிகாரி செய்த மோசமான செயல்
கடந்த 5ஆம் திகதி, செட்டிபாளையம் கடற்கரையில், கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர், சுருக்கு வலை பயன்படுத்தி மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டி நந்தீசன் என்பவரை கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், சுமார் 2 மணிநேரம் முழங்காலில் வைத்து தாக்கி சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திலும் கடந்த 8ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்பேரில், பொலிஸார் குறித்த கடற்படை அதிகாரியை கைது செய்து, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
வழக்கு விசாரணையின் போது, வழக்காளி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, குற்றவியல் கோவை 314ஆம் பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்தது தவறானது என வாதிட்டார்.
இது சித்திரவதை தொடர்பான குற்றமாக இருப்பதால், 1994ஆம் ஆண்டு 22ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தும் அவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இதனை பரிசீலித்த நீதவான், தற்போதைய வழக்கின் அடிப்படையில் கடற்படை அதிகாரியை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கை மீண்டும் விசாரணை செய்து, பொருத்தமான சட்டத்தின் கீழ் சாட்சிகள் மற்றும் சான்றுகளுடன் எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் வழக்கு தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri