நாவிதன்வெளி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டமானது, நேற்று(29.04.2026) நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ராகுலநாயகி சஜிந்ரனும் கலந்து கொண்டுள்ளார். இதன்போது, பிரதேச மக்களின் அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கல்வி மேம்பாடு மற்றும் வெள்ள அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
இதன்படி, நாவிதன்வெளி பிரதேச மக்களின் காதி நீதிமன்றத் தேவைகளுக்காக தற்போது சம்மாந்துறை பிரதேசத்திற்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.

இதற்கான தீர்வாக நாவிதன்வெளிக்கு தனியான காதி நீதிமன்றம் அமைத்தல் அல்லது சம்மாந்துறை காதி நீதிபதி வாரத்தில் குறைந்தது ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் நாவிதன்வெளியில் சேவையாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாளம்பைக்கேணி கமு/சது/அஸ்-சிராஜ் மஹா வித்தியாலயத்திற்கு வகுப்பறைகள் மற்றும் கேட்போர் கூடம் வசதிகளுடன் கூடிய மூன்று மாடிக் கட்டிடம் அமைக்கப்பட வேண்டும்.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு வீதிகளை புனரமைத்தல் மற்றும் காங்கிரீட் அமைக்க வேண்டும் என்பதுடன், சாளம்பைக்கேணி 03, 04 பகுதிகளில் அமைந்துள்ள ஆ.26 சனல் வீதிக்கு காங்கிரீட் அமைப்பது உறுதிச் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிரதேச மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தித் தேவைகளை மையப்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதேச மக்களின் வாழ்வாதாரத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டங்கள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அஷ்ரப் தாஹிர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், எம்.ஏ.எம்.தாஹிர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திலகராணி கிருபைராஜா, கிராம அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.