புதிய திட்டத்தை தொடங்க உள்ள நேட்டோ அமைப்பு
ஆர்டிக் பிராந்தியத்தில் தனது கண்காணிப்பு மற்றும் இராணுவ வலிமையை அதிகரிக்கும் நோக்கில், 'ஆர்டிக் சென்ட்ரி' (Arctic Sentry) எனும் புதிய திட்டத்தை நேட்டோ (NATO) அமைப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது.
கிரீன்லாந்து தீவைக் கையகப்படுத்த வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விருப்பத்தால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த கடும் இழுபறி, சமீபத்தில் டாவோஸ் நகரில் ட்ரம்ப் மற்றும் நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவுக்கு வந்துள்ளது.
அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகள்
இதனைத் தொடர்ந்து, கிரீன்லாந்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆர்க்டிக் பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நேட்டோ இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்த வாரம் பிரஸ்சல்ஸில் நடைபெறவுள்ள நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 'ஆக்டிக் சென்ட்ரி' திட்டத்தின் கீழ், ஆக்டிக் பகுதியில் ஆளில்லா விமானங்கள் (Drones), கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் விமானப்படை கண்காணிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரப்படுத்தப்படும்.
இப்பிராந்தியத்தில் ரஷ்யாவின் அதிகரித்துவரும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் சீனாவின் வளர்ந்து வரும் ஆர்வத்தை எதிர்கொள்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
சர்வதேச அரசியலில் முக்கியத்துவம்
புதிய படைகளைப் பாரிய அளவில் குவிப்பதை விட, ஏற்கனவே இப்பகுதியில் உள்ள நேட்டோ நாடுகளின் இராணுவ வளங்களை எவ்வாறு ஒருங்கிணைத்து மிகவும் திறம்பட பயன்படுத்துவது என்பதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேட்டோவின் ஐரோப்பியப் படைகளுக்கான தலைமைத் தளபதி ஜெனரல் அலெக்ஸஸ் கிரின்கேவிச், இதற்கான திட்டமிடல் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
கிரீன்லாந்தின் இறையாண்மையை மதிக்கும் அதேவேளை, இப்பகுதியில் அமெரிக்காவின் பாதுகாப்பு கவலைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு சமரசத் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
ரஷ்யா தனது ஆர்க்டிக் தளங்களை நவீனப்படுத்தி வரும் சூழலில், நேட்டோவின் இந்த நடவடிக்கை சர்வதேச அரசியலில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.