இத்தாலி முழுவதும் நாடளாவிய பணிநிறுத்தம் – பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் போராட்டம்
இத்தாலியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, குறைந்த ஊதியம் மற்றும் பொதுச் சேவைகளை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை பல்லாயிரக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்திற்கு அடித்தளத் தொழிற்சங்கமான USB (Unione Sindacale di Base) அழைப்பு விடுத்திருந்தது.
நாடு முழுவதும் போராட்டம்
இதன்படி 24 மணிநேர நாடளாவிய பொது பணிநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டதுடன், 40க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. துரின் நகரில் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர்.

ரோம் நகரில் கொலோசியம் அருகே பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றபோது பொலிஸாருடன் பதற்றம் ஏற்பட்டது.
இதன்போது எட்டு பேர் கைது செய்யப்பட்டதாக ANSA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாழ்க்கைச் செலவு
மிலான் நகரிலும் போராட்டக்காரர்கள் நகரின் பிரதான சுற்றுவீதியில் பேரணியாகச் சென்றனர். அதேவேளை, ஜெனோவா துறைமுகத்திற்குள் சுமார் 15,000 தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோதல் பகுதிகளுக்கு ஆயுதங்களை அனுப்புவதற்கு துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் இந்தப் போராட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இதற்கிடையில், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், அல்பேனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.