அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் (Photos)
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றர்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து இன்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் உள்ள சுகாதார சேவையாளர்களுக்கான பிரத்தியேக எரிபொருள் விநியோகம் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்படுகின்ற போதும் மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உரிய முறையில் எரிபொருள் வழங்கப்படாமை யினை கண்டித்தே குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட சுகாதார திணைக்களத்தில் சுமார் 1200 வரையிலான பணியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் தூர இடங்களில் இருந்து வந்து தமது நிலையங்களில் கடமையாற்றி வருகின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச பணியாளர்களை சுழற்சி முறையில் கடமையாற்றுவதற்கும்,வீடுகளில் இருந்து கடமையாற்றுவதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜனாதிபதியினுடைய வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஏனைய சுற்று நிறுபங்களின் படி சுகாதார திணைக்கள த்தைச் சேர்ந்த அனைவரும் 7 நாட்களும்,24 மணி நேரமும் கடமையாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.
ஆனால் வைத்தியசாலை களில் கடமையாற்றுகின்ற பணியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தற்போது வரிசைகளில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட சுற்று நிருபங்களின் படி வெள்ளிக்கிழமை தினங்களில் சுகாதார திணைக்கள த்தைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் விற்பனை நிலையங்களில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் ஏனைய மாவட்டங்களில் உரிய முறையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
மன்னார் மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட எரிபொருள் விற்பனை நிலையத்தில் கடந்த வாரமும்,இவ் வாரமும் உரிய முறையில் எரிபொருள் வழங்கப்படாமை யை கண்டித்து குறித்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பல்வேறு தொழில் சங்கங்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்ததோடு பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது அங்கு சென்ற மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்து ஊர்வலமாக சுகாதார சேவை பணியாளர்கள் மன்னார் மாவட்டச் செயலகம் வரை சென்றனர்.பின்னர் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் வகையில் உதவி அரசாங்க அதிபரிடம் கையளித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.
வடமராட்சி
வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எரிபொருள் வழங்க கோரி வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக எரிபொருளைப் பெற்றுத்தரக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
எரிபொருளை பெற்றுத் தராவிடில் உலகவங்கியின் ரூபா 5000 கொடுப்பனவை வழங்கிவதிலிருந்து விலக நேரிடும்., அத்தியாவசிய சேவையில் உள்ளடக்கப்பட்டுள்ள எரிபொருளை பிரதேச செயலர் தமக்கு பெற்றுத்தர வேண்டும்.
அரசினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தற்போதைய உதவி திட்டங்களை நடைமுறைப்படுத்த கண்காணிக்க எரிபொருளை பெற்றுத்தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை சமுர்த்தி வங்கி கள பணியாளர்கள், பருத்தித்துறை சமுர்த்தி கள பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சங்கானை
சங்கானை முச்சக்கர வண்டி சங்கத்தினர் தங்களுக்குரிய எரிபொருள் கிடைக்கப் பெறாததை அடுத்து நேற்று சங்கானை பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது “சங்கானை பஸ் தரிப்பு நிலைய வாடகை சேவை வாகனங்களுக்கான எரிபொருளை தாருங்கள்” , “வேண்டும், வேண்டும் பெட்ரோல் வேண்டும்”, “முச்சக்கர வண்டி சேவை உங்களுக்கு தேவை இல்லையா”, “எமது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எமக்கான எரிபொருளை தங்கு தடை இன்றி தாருங்கள்”, “எரிபொருள் மாபியாக்களை சட்டத்திற்கு முன் நிறுத்துங்கள்” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புத்தளம்
மக்களை வதைக்கும் ராஜபக்ச அரசாங்கத்தை விலகுமாறு வலியுறுத்தியும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார விலையேற்றம், எரிபொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து புத்தளத்தில் அப்பாக்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பிவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் அப்பாக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் இறால் சந்தியிலிருந்து பேரணியாக புத்தளம் கொழும்பு முகத்திடல் வரை முன்னெடுக்கப்பட்டது.
சங்கானை
சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க ஊழியர்கள் நேற்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் பணி பகிஸ்கரிப்பினையும் முன்னெடுத்துள்ளனர்.
இப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் மிகவும் குறைந்த வேதனமான 550 ரூபா சம்பளத்திற்கே தற்போது கடமையாற்றி வருகின்றோம்.
கிளைகளில் வருமானம் அதிகரித்து சங்கத்தின் இலாபம் அதிகரிப்புக்காக எம்மால் இயன்ற அளவு உழைக்கின்றோம். ஆனால் சங்கத்தின் நிர்வாகம் மற்றும் முகாமையாளர் ஆகியோர் எங்களை பழிவாங்குகின்றனர்.
இந்த சம்பளத்தில் வேலை செய்து தற்போதைய பொருளாதார நெருக்கடி காலத்தில் எவ்வாறு எமது வாழ்க்கை செலவை ஈடு செய்வது? எமது கல்வி தகைமைகளை காரணம் காட்டி எமக்கான நிரந்தர நியமனத்தை இழுத்தடிக்கின்றனர்.
எம்மை கடமைக்கு அமர்த்தும்போது எமக்கு நிரந்தர நியமனம் தருவதாக கூறித்தான் பணியில் அமர்த்தினார்கள். ஆனால் தற்போது வழங்க முடியாது என்று கூறுகின்றனர். 15 வருடங்களுக்கு மேலாக கடமை புரியும் பணியாளர்களுக்கு கூட இன்னமும் நிரந்தர நியமனம் வழங்கவில்லை.
இந்த கல்வி தகைமையில் நிரந்தர நியமனம் வழங்க முடியா விட்டால் எங்களை பணியில் அமர்த்தும் போதே அதை கூறியிருக்கலாம் தானே. இவ்வளவு காலமும் எங்களை ஏன் ஏமாற்றினார்கள்? எமக்கான சரியான தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் 2022.06.28 தொடக்கம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்.
எமது பிரச்சினைகளை ஆளுநர் அவர்கள் கருத்தில் கொண்டு எமக்கான சரியான தீர்வினை வழங்க வேண்டும். நாங்க ஆளுநரை சந்தித்து பேசுவதற்கு அவர் எமக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்” என்றனர்.
கந்தளாய்
கந்தளாயில் ஜனாதிபதியும்,பிரதமரும் பதவி விலகுமாரி கோரி மக்கள்விடுதலை முண்னியினரால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது கந்தளாய் நகரில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டது.
"கோட்டாபய வீட்டுக்கு போ",மற்றும் "ரணில் வீட்டுக்கு போ"என்ற கோசத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஐம்பதிற்கும் மேற்பட்டோர் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதோடு, “நாட்டை சீரழிக்காதே “,“நாட்டை விட்டு போ” போன்ற வாசகங்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தார்கள்.
[U61TLT ]