நாடாளாவிய ரீதியில் இடம்பெறும் நோன்பு கொண்டாட்டங்கள்
நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (14) வெள்ளிக்கிழமை தமது வீடுகளுக்குள்ளேயே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றித் தொழுகையில் ஈடுபட்டு அமைதியான முறையில் இம்முறை ரமழான் பண்டிகையை முஸ்லிம் மக்கள் கொண்டாடியுள்ளனர்.
அத்துடன், கோவிட் வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கி, பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து, நாடு மீண்டும் வழமைக்குத் திரும்ப வேண்டும் எனவும் அவர்கள் இறைவனிடம் கேட்டுக்கொண்டனர்.
‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா இதுவாகும்.
இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமழான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமழான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகின்றது.
முப்பது நாட்கள் உண்ணாமல், பருகாமல், நோன்பிருந்து இறைவனை விழித்திருந்து, தனித்திருந்து, இறைமையைத் தினம் ஓதி, இல்லாதவருக்கு ஈந்து இறைவழிபாட்டில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்தி அதன் இறுதியாக இன்பமுடன் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
மலையகம்
மலையகத்தில் மக்கள் வீட்டுக்குள் இருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றித் தொழுகையில் ஈடுபட்டு பெருநாளை அமைதியாகக் கொண்டாடியுள்ளனர்.
ஹட்டன், பொகவந்தலாவ, நுவரெலியா உட்பட மலையகத்தின் பல நகரங்களிலும் இந்நிலைமையைக் காணக்கூடியதாக இருந்தது.
மலையக செய்திகள் - திருமால்
மன்னார்
மன்னாரில் மக்கள் வீட்டுக்குள் இருந்து அமைதியான முறையில் தொழுகையில் ஈடுபட்டு பெருநாளைக் கொண்டாடியுள்ளனர்.
மேலும் தேவையற்ற ஒன்று கூடல்களைத் தவிர்த்து சுகாதார நடை முறைகளைப் பின்பற்றி வீடுகளிலிருந்தவாறே நோன்பு பெருநாள் நிகழ்வுகளை முன்னெடுக்குமாறும், கோவிட் விரைவில் இந்த முழு உலகத்தை விட்டு விலக எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திக்குமாறும் மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசல் மௌலவி எஸ்.எ.அசீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் செய்திகள் - ஆசிக்
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டிருந்தன.
இதனால் முஸ்லிம் மக்கள் தமது வீட்டு வளாகத்திலும், வீட்டு மொட்டை மாடிகளிலும் தமது குடும்ப அங்கத்தவர்களுடன் நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டதுடன், அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நோன்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா செய்திகள் - திலீபன்
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் நோன்புப் பெருநாள் தொழுகைகள் வீடுகளிலே நடைபெற்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
கந்தளாய் பேராற்று வெளி ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் இலாஹியா ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகைகள் நடைபெறவில்லை.
பள்ளிவாசல்கள் பூத்திடப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு பலப்பட்டிருந்தது.
திருகோணமலை செய்திகள் - முபாரக்






