நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் (Photos)
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எரிபொருளை விநியோகிக்கும் பணிகள் தொடர்பிலும் பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
மலையகம்
ஹட்டன்- குயில்வத்தை உள்ளிட்ட ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றைய தினம் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக வரிசையிலிருந்து வாகனங்களுக்கு ஹட்டன் பொலிஸாரால் டோக்கன்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டு பெட்ரோல் வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
இதே நேரம் குயில்வத்தை எண்ணை நிரப்பு நிலையத்தில் வட்டவளை பொலிஸார் வாகனங்களை வரிசைப்படுத்தி முறையாக எண்ணை வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு சிலர் கொள்கலன்களுக்கு எண்ணை வழங்குவதாக தெரிவித்து பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.
இதனால் குறித்த எரிபொருள் நிலையத்தில் சில நிமிடங்கள் அமைதியின்மை ஏற்பட்டதுடன், அதனை தொடர்ந்து பொலிஸார் எரிபொருள் பெற வந்தவர்களுடன் கலந்துரையாடி நிலைமையினை அமைதிக்கு கொண்டு வந்துள்ளனர்.
செய்தி: மலைவாஞ்சன்
மட்டக்களப்பு
ஒரு சில தினங்களின் புதிய தொழில்நுட்பத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருட்கள் வழங்கும் செயற்பாடுகள் வழமைக்கு திருப்பினாலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக பாஸ் நடைமுறையிலேயே எரிபொருட்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி: குமார்
வவுனியா
வவுனியாவில் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மாவட்ட செயலகத்தின் பரிந்துரையின் கீழ் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தால் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (18.07) பெட்ரோல் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.
இதன்போது, வவுனியா மாவட்ட செயலகத்தின் சிபார்சில் 4 பிரதேச சபைகள் மற்றும் ஒரு நகரசபை உள்ளடங்கிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு 400 லிட்டர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு 400 லிட்டர் பெட்ரோல், கமலநலசேவைகள் திணைக்களத்திற்கு 200 லீலிட்டர் பெட்ரோல் என 1000 லிட்டர் பெட்ரோல் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், சனிக்கிழமை உள்ளுராட்சி மன்றங்களுக்கு 400 லிட்டரும், வங்கிகளுக்கு 250 லிட்டர், சிறைச்சாலை திணைக்களத்திற்கு 250 லிட்டர் என 900 லிட்டர் பெட்ரோல் வழஙகி வைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கடந்த மூன்று தினங்களில் 1900 லிட்டர் அத்தியாவசிய தேவை நிறுவனங்களுக்கு என மாவட்ட செயலகத்தால் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சிபார்சு தவிர்ந்த மேலும் பலர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்கலனில் பெட்ரோல் பெற்றுச் சென்றதையும் அவதானிக்க முடிந்தததாகவும், இதன் காரணமாக தாம் எரிபொருள் பெற முடியாது மீண்டும் வீதியில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
செய்தி: திலீபன்