வட பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது (photo)
யாழ். பல்கலைக்கழக வளாகத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் உட்பட அந்த பெண்ணிடம் போதைப்பொருள் வாங்கும் 10 வாடிக்கையாளர்களும் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (29.03.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான அணியினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட வாடிக்கையாளர்களில் ஒருவராக யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவரும் அடையாளாம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.மாதகல்
யாழ்.மாதகல்ப பகுதியில் 150 கிலோ கிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (28.03.2023) பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இருந்தி கடத்தி வந்துமாதகல் கடற்கரையில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா தற்போது சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை கலவெட்டிதிடல் பகுதியில் சட்டவிரோத மதுபான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (28.03.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கையின் போது இரு சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றயவர் தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 48 லீட்டர் கசிப்பினையும் 268 லீட்டர் கோடாவும் மற்றும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உபகரணம் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம் (29.03.2023) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: யது