நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள்
வவுனியா பொலிஸாரின் துரித நடவடிக்கையால் குற்றச்செயல் தொடர்பில் இரு இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, வைத்தியசாலைக்கு சென்ற பெண் ஒருவர் சிகிச்சை முடிந்தபின் நேற்று (22.10) பிற்பகல் 2 மணியளவில் வீடு நோக்கி சென்ற போது பின் தொடர்ந்து சென்ற இரு இளைஞர்கள் வவுனியா, குடியிருப்பு பகுதியில் வைத்து குறித்த பெண் மஞ்சள் நூலில் அணிந்திருந்த 1 பவுண் தாலியினை அறுத்துச் சென்றிருந்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் அகமட், பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்கா (37348), விக்கிரமசூரிய (36099), டிலீபன் (61461), உபாலி (60945) பொலிஸ் கான்ஸ்டபிள்களான சங்கயரொகான் (31043), தயாளன் (91792), திசாநாயக்கா (18219) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனடிப்படையில் பூந்தோட்டம், மதீனாநகர் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையை இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அறுத்துச் செல்லப்பட்ட தாலி அடகு கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அச்சுவேலி
அச்சுவேலி - பத்தமேனி பகுதியில் ஹெரோயின் உயிர் கொல்லி போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் ஏற்கனவே ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கஞ்சா போதை பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈழத்துச் சிதம்பரம் ஆலயத்தின், குருக்கள் தங்கும் இல்லத்தில் உள்ள பெறுமதி வாய்ந்த பல பொருட்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் களவாடப்பட்டிருந்தன.
இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் இன்றைய தினம் 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருடப்பட்ட பொருட்களை கடைகளில் விற்பனை செய்திருந்த நிலையில் அந்த பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் வீடுடைத்து பத்து இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் அலைபேசி என்பனவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சித்தன்கேணிப் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையானவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் காங்கேசன்துறை குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸார் சங்கானையைச் சேர்ந்த 29 வயது இளைஞரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் தேடப்பட்டு வருகின்றார்
என்றும் மேலும் கூறியுள்ளனர்.



