வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டம் சாவகச்சேரியில் ஆரம்பித்து வைப்பு
இருவார கால தீவிர தேசிய கள செயற்பாடு – 2025' என்னும் தொனிப்பொருளில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் கச்சாயில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு இன்று(14) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி கருத்து தெரிவிக்கையில், இலங்கையிலேயே இந்தச் செயற்றிட்டம் யாழ். மாவட்டத்தில் தான் ஆரம்பிக்கப்படுகின்றது. உண்மையில் 3 ஆயிரம் மில்லியன் தேங்காய் உற்பத்தியை வருடாந்தம் நாம் எதிர்பார்த்தாலும் அதனை விடக் குறைவாகவே கிடைக்கப்பெறுகின்றது.
வெள்ளை ஈ தாக்கம்
வெள்ளை ஈ தாக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்கங்கள், விலங்குகளால் ஏற்படுத்தப்படும் சேதம் என பல காரணிகள் இதில் தாக்கத்தைச் செலுத்துகின்றன.
2030ஆம் ஆண்டு 4,200 மில்லியன் தேங்காய்களை வருடாந்தம் உற்பத்தி செய்யவேண்டும் என்ற இலக்குடன் செயற்படவுள்ளோம். வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நாம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு அதிகமாகவே தேவை. 150 இயந்திரங்கள், 150 பணியாளர்களை நாங்கள் இங்கு அழைத்து வந்துள்ளோம். இருப்பினும் ஓர் இயந்திரத்தை இயக்குவதற்கு ஆகக் குறைந்தது 4 பேர் தேவை.
எனவே எமது ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆளுநர் தனது உரையில், வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டம் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை ஈ தாக்கம் கடுமையாக ஏற்பட்டிருந்தது. பின்னர் அது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இப்போது கட்டுப்படுத்தப்பட முடியாதளவுக்கு பெருகியுள்ளது.
தென்னை உற்பத்தி
பல தென்னைகளில் உற்பத்தி பூச்சியமாகியுள்ளது. எமது மக்கள் தங்கள் வீட்டுத் தேவைக்கு அப்பால் தேங்காய் விற்பனை ஊடாக சிறிய வருமானத்தையும் பெற்று வருகின்றனர். அவற்றுக்கும் வெள்ளை ஈ தாக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வடக்கில் தென்னை உற்பத்தியை மேம்படுத்துவதற்கான தென்னை முக்கோண வலயத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
எனவே வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதன் ஊடாகவே எதிர்காலத்தில் தென்னை உற்பத்தியை இங்கு அதிகரித்துக்கொள்ள முடியும் என்பதால், இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும், என்றார்.
தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் தனது உரையில், வடக்கு மாகாண ஆளுநர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் இந்தச் செயற்றிட்டம் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவரின் எண்ணத்தில் உருவானது எனக் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்தச் செயற்றிட்டத்தில் பொதுமக்களை பங்கெடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து தென்னை மரங்களில் பீடித்துள்ள வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடு உத்தியோகபூர்வமாக நடைபெற்றது.
தொலைபேசி இலக்கம்
யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி, தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க, தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் சு.செந்தில்குமரன், விவசாய பிரதி மாகாணப் பணிப்பாளர் எஸ்.அஞ்சனாதேவி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
113 தென்னை பயிர்ச் செய்கை சபையால் முன்னெடுக்கப்படும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்துக்கு தன்னார்வமாக உதவி செய்ய விரும்புவர்கள் தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தனைத் தொடர்பு கொள்ள முடியும். (0766904580)
அத்துடன் இரு வார காலமும் எங்கெங்கு முன்னெடுக்கப்படவுள்ளன மற்றும் தொடர்பு கொள்ளவேண்டியவர்களின் விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி பிதேச செயலர் பிரிவு - 14,15,16 (0776116551) கோப்பாய் பிரதேச செயலர் பிரிவு - 17,18 (0774409933) உடுவில் பிரதேச செயலர் பிரிவு - 21, 22 (0779074230) நல்லூர் பிரதேச செயலர் பிரிவு - 23, 24 (0778222560) யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவு - 25 (0771976959)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
