தேசிய பிரச்சினையை தீர்க்காது ஏமாற்றினால் வடக்கில் இளைஞர்கள் போராடுவார்கள்-ராஜித சேனாரத்ன
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பது சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள பேச்சுவார்த்தைகள் இதற்கு முன்னர் நடந்த பேச்சுவார்த்தைகள் போல் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அனைத்து தரப்பினரின் கடமை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று ஆரம்பமான சர்வக்கட்சி பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
35 ஆண்டுகளாகியும் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி பேசுகிறோம்
1987 ஆம் ஆண்டு 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. தற்போது 2022 ஆம் ஆண்டு நாம் தற்போதும் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.
35 ஆண்டுகள் கடந்தும் அதனை எம்மால் நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளது. இதுதான் நாட்டின் உண்மையான நிலைமை. நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் 13 வது திருத்தச் சட்டத்தின் காணி பிரச்சினை வேறு பிரச்சினைகளை பேசி சிக்கலாக்கி கொள்வதை காணக்கூடியதாக இருந்தது.
13வது திருத்தச் சட்டம் முழுமையான நடைமுறைப்படுத்தப்படுமாயின் காணி பிரச்சினை தனியாக ஏற்படாது. 13வது திருத்தச் சட்டம் வடக்கு, கிழக்கு மக்களின் இரண்டு பிரதான பிரச்சினைகளுக்கு பதிலளித்தது.
ஒன்று அவர்களின் பாதுகாப்புக்காக பொலிஸ். இரண்டாவது அவர்கள் வாழும் காணி தொடர்பான உரிமை. இந்த இரண்டை உறுதிப்படுத்தினால், ஏனைய பிரச்சினைகள் தீர்ந்து விடும். அன்று 13வது திருத்தச் சட்டத்தை எதிர்த்தவர்கள் தற்போது அதற்கு இணங்கியுள்ளனர்.
எனினும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் போது யாராவது எதிர்க்கலாம். அப்படித்தானே இந்த நாட்டில் வேலைகள் நடக்கின்றன.
நேற்றைய பேச்சுவார்த்தையில் கெவிந்து குமாரதுங்கவை தவிர ஏனைய அனைவரும் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விடயத்தை ஏற்றுக்கொண்டனர். இது மிகப் பெரிய விடயம்.
13வது திருத்தச் சட்டம் சரியான தீர்வு என்று கூறியதன் காரணமாகவே அன்று விஜய குமாரதுங்கவை சுட்டுக்கொன்றனர். அவரை கொன்றவர்கள் தற்போது மாகாண சபைகளுக்குள் வந்துள்ளனர்.
சம்பந்தன் போன்றவர்களுடன் பேசி பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்
மாகாண சபைகளின் இயக்கி தங்களின் கைகளில் இருப்பதாக அவர்களின் தலைவர்கள் கூறினர். ஆனால், மாகாண சபைகள் காரணமாக நாடு பிரியும் விசாவை பெற்றே மாகாணங்களுக்கு செல்ல நேரிடும் என்று கூறியே அன்று அவர்கள் விஜய குமாரதுங்கவை கொன்றனர்.
தற்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் அவர்கள் என்ன கூறுவார்கள் என்று பார்ப்போம். இம்முறை தேசிய பிரச்சினையை தீர்ப்பதாக கூறி ஏமாற்றினால், கடந்த காலத்தில் நடந்தது போல் போராட்டங்களில் வடக்கை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபடுவார்கள்.
அது ஆயுதம் தாங்கிய போராட்டமாக இருக்காது அமைதியான போராட்டமாக இருக்கும். அதன் மூலம் வடக்கின் அரசியல் முற்றாக தலைகீழாக மாறும். அப்படி நடந்ததால், புதியவர்களுடனேயே எதிர்காலத்தில் பிரச்சினையை பற்றி பேச்சுவார்த்தை நடத்த நேரிடும்.
அதற்கு முன்னர் சம்பந்தன் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க முடியுமான நேரத்தில், கட்டாயம் அதனை செய்ய வேண்டும் எனவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.