தேசிய மக்கள் சக்தியும் இனவாத கட்சியே..! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்
தேசிய மக்கள் சக்தியும் அடிப்படையில் ஒரு இனவாத கட்சி என்றும், மாகாண சபைத் தேர்தலை நடாத்தினால் தனது இனவாத வாக்கு வங்கியில் வீழ்ச்சியடைந்துவிடும் என அக்கட்சி அஞ்சுகின்றது எனவும் அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஒரு அமைச்சர் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடாத்தப்படும் என கூறியுள்ளார்.
அமைச்சர் கூறியது போல அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்துவதாயின் அது தொடர்பான சட்ட திருத்தம் உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.பொதுவான கருத்து பழைய தேர்தல் முறைப்படி நடாத்தப்படல் வேண்டும் என்பதே.
தனி நபர் பிரேரனை
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இது தொடர்பாக தனி நபர் பிரேரனை ஒன்றையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றார். ஆனால் அப்பிரேரனை இன்னமும் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவில்லை. அனைத்து கட்சிக் கூட்டத்தில் இது பற்றி தீர்மானிக்கப்படும் என அரசாங்கம் கூறியபோதும் அதற்கான முயற்சிகள் எதுவும் எதுவரை இது வரை இடம் பெறவில்லை.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றது போலவே தெரிகின்றது. இதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று தமது வாக்குகள் குறைந்துவிடும் என்ற அச்சம். இரண்டாவது தமிழர்களுக்கு ஒரு அரசியல் களம் கிடைத்துவிடும் என்ற அச்சம்.
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அதில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. விலைவாசிகளைக் குறைத்தல், உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளை வெளிப்படுத்தல் என்பன அதில் முக்கியமானவையாகும்.
வாக்குறுதிகளில் ஊழல் ஒழிப்பு, போதைவஸ்து ஒழிப்பு, என்பன தொடர்பாகவே சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பெருந்தேசியவாதிகள் மாகாண சபை முறை தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் களமாகிவிடும் என்பதால் மாகாண சபை முறையை விரும்பவில்லை.
தேசிய மக்கள் சக்தி இனவாத கட்சி
பௌத்த மத பீடங்கள் அதனை பகிரங்கமாகவே தெரிவித்துள்ளன. தேசிய மக்கள் சக்தியும் அடிப்படையில் ஒரு இனவாத கட்சியே! மாகாண சபைத் தேர்தலை நடாத்தினால் தனது இனவாத வாக்கு வங்கியில் வீழ்ச்சி அடைந்துவிடும் என அக்கட்சி அஞ்சுகின்றது. முன்னர் மகிந்தரிடம் சென்ற இனவாத வாக்குகள் கடந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கே கிடைத்திருந்தன.
தேசிய மக்கள் சக்திக்கே அரசாங்கத்திற்கு உள்ளது அழுத்தங்களை விட சர்வதேச பிராந்திய அழுத்தமும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உண்டு. குறிப்பாக இந்திய அழுத்தம் அதிகமாகவே உள்ளது.
இந்தியாவிற்கு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்கு மாகாண சபை பெயரளவிலாவது இயங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதால் தேர்தலை நடத்துமாறு வற்புறுத்துகின்றது.
தமிழ் மக்கள் முழுமையாக இந்தியாவை விட்டு விலகிவிடுவர் என்ற அச்சமும் அதற்கு உண்டு. மேற்குலகம் ஜெனிவா ஊடாக வற்புறுத்துகின்றது.
அனுசரணை நாடுகளின் தீர்மானம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையிலும், அனுசரணை நாடுகளின் தீர்மானத்திலும் இந்த அழுத்தம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல்பக்க அழுத்தங்கள் காரணமாக விருப்பமின்மைக்கு மத்தியிலும் தேர்தலை நடாத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கும் எனினும் கூடியவரை காலத்தை கடத்த முடிந்தால் அதற்கும் வழிகளைத் தேடும்.
தேர்தல் நடந்தால் தென்பகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றியடையும் ஆனால் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படும். கூட்டுறவுச் சங்க தேர்தலில் வாக்குச் சரிவு ஏற்கனவே ஏற்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் அந்த சரிவு இருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட சிங்கள எதிர்க்கட்சிகள் மாகாண சபைத் தேர்தல் பழைய தேர்தல் முறைப்படி உடனடியாக நடத்தப்படல் வேண்டும் என வற்புறுத்துகின்றன.
தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் களம் கிடைப்பதை அவை பெரிதாக விரும்புவதில்லை. ஆனாலும் தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியினைக் குறைக்க வேண்டும் என்பதற்காக தேர்தலை நடத்துமாறு வற்புறுத்துகின்றன.
அரசியல் யாப்பில் உள்ள காணி அதிகாரம், பொலீஸ் அதிகாரம் என்பவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவை ஒருபோதும் கூறப்போவதில்லை. இத்தனைக்கும் காணி, பொலீஸ் அதிகாரம் கூட சுயாதீனமாக இல்லை என்பது வேறு கதை. எதிர்க்கட்சிகளில் பொது ஜன முன்னணிக்கு மாகாண சபைத் தேர்தலில் விருப்பம் இல்லாவிட்டாலும் தனது இருப்பை பாதுகாப்பதற்காகவும், அரசாங்கத்தின் செல்வாக்கை வீழ்த்துவதற்காகவும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைத்து செயல்படவே முயற்சிக்கின்றது.
ஆனாலும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் ஐக்கிய முன்னணிக்கு செல்லும் எனக் கூற முடியாது. இனவாத வாக்குகள் வேறு கட்சிகளுக்கு செல்வதை அக்கட்சி விரும்பப் போவதில்லை. அக்கட்சி இப்போது மீளவும் கிராமங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அழுத்தம்
மகிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்சவினை எப்படியும் தலைவராக்குவது என்பதில் உறுதியாக உள்ளார். அவரது கவலையெல்லாம் வழக்குகளில் குடும்பத்தை மாட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிக்கின்றது என்பதே!
தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுக்கின்றன, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 13 வது திருத்தத்தினையோ, மாகாண சபை முறையினையோ ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ் மக்களின் நிரந்தர தீர்வான சுய நிர்ணய சமஸ்டி என்ற இலக்கை நோக்கி நகர்வதற்கு மாகாண சபை முறை தடையாக இருக்கும் என்றே அக்கட்சி கருதுகின்றது. ஆனாலும் அரசியல் கட்சி என்ற வகையில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அது தயாராகி வருகின்றது.
அக்கட்சி போட்டியிடும் முதலாவது மாகாண சபைத் தேர்தலாக வரப்போகும் தேர்தலே இருக்கும். தமிழ் தேசிய கட்சிகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழரசு கட்சியும் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அழுத்தங்களைக் கொடுத்தாலும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியே இது தொடர்பான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது.
இதுவரை வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்களில் பரப்புரைக் கூட்டங்களை நடாத்தியுள்ளது. தமிழரசுக்கட்சி இதில் பெரியளவில் பங்கேற்றதாகத் தெரியவில்லை.
வவுனியா கூட்டத்தில் மட்டும் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனும் தேசியப்பட்டியல் உறுப்பினர் சத்தியலிங்கமும் கலந்து கொண்டிருந்தனர். வரதராஜப்பெருமாள் தனித்தும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தும் கருத்துக்களை கூறி வருகின்றார்.
இந்த பரப்புரைச் செயற்பாட்டிற்கு பின்னால் இந்திய நிகழ்ச்சி நிரல் இருப்பதாகவும் பேசப்படுகின்றது. இந்தியா இதன் மூலம் பந்தை தமிழ்த் தரப்பு பக்கம் தட்டிவிட முயல்கின்றது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கை - இந்திய ஒப்பந்தம்
இந்தியா 13 ஆவது திருத்தத்தினை இடைக்கால யோசனையாக முன்வைக்கவில்லை. அரசியல் தீர்வாகவே முன்வைக்கின்றது. ஆனால் எந்த தமிழ் அரசியல் கட்சியும் இதனை அரசியல் தீர்வாக ஏற்கத்தயாராக இல்லை.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்படி தான் 13 வது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் உருவாக்கத்தில் தமிழ் மக்களுக்கு எந்தவித பங்கும் இருக்கவில்லை. இந்திய அரசும், இலங்கை அரசும் இணைந்தே இதனை உருவாக்கியிருந்தன.
இந்திய அரசு தமிழ் மக்களின் நம்பிக்கைப் பொறுப்பாளனாகச் செயற்பட்டது. எனவே 13 வது திருத்தத்தின்படி தேர்தலை நடாத்த வேண்டும் என வலியுறுத்தும் பொறுப்பும், 13 ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் இந்தியாவிற்கே உண்டு.
இந்தியா இந்த விவகாரத்தில் நேர்மையாக நடக்கவில்லை. வடக்கு - கிழக்கு இணைந்த மாகாணத்தை பிரித்த போதும் மாகாண சபைகளின் அதிகாரங்களை பிடுங்கி எடுத்த போதும் இந்தியா எந்த எதிர்ப்பையும் காட்டாமல் மௌனமாக இருந்தது. தற்போது தனது பொறுப்பினை தமிழ்த் தரப்பின் தலையில் கட்டிவிட முயல்கின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 13வது திருத்தத்தினை கடுமையாக எதிர்த்து வருகின்றது. இதனால் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் மாட்டுப்பட அது விரும்பவில்லை. இக்கட்சி இந்திய நிகழ்ச்சி நிரலுக்குள் வெளியில் நிற்பதனால் தமிழரசுக் கட்சியும் இந்திய நிகழ்ச்சி நிரலுக்குள் மாட்டுப்படாமல் நழுவி ஓடுகின்றது.
இந்தியாவையும் திருப்திப்படுத்த வேண்டும். அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்கின்றோம் எனவும் காட்டக்கூடாது என இரட்டை நிலைப்பாடு இருப்பதால் தான் நழுவி ஓடுகின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு வெளியில் நிற்கும் வரை தமிழரசுக் கட்சி இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் செல்லாது. துரோகி பட்டம் தனக்கு கிடைத்து விடும் என்ற அச்சம் தமிழரசுக் கட்சிக்கு இருக்கின்றது.
சுமந்திரன் ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கத்தின் “ஏக்கிராச்சிய” தீர்வின் உருவாக்கத்தில் ஒருவராக இருந்ததையும் இன்றுவரை அதனை நியாயப்படுத்துவதையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக விமர்சித்து வருகின்றது. அதற்கு பதிலளிக்க தமிழரசுக் கட்சி திணறுகின்றது.
கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் “ஏக்கியராச்சிய” தீர்வை தனது கட்சி ஒருபோதும் ஏற்காது தலையிலடித்து சத்தியம் செய்வது போல கூறி வருகின்றார். ஆனால் பதில் செயலாளர் சுமந்திரன் இதுவரை “ஏக்கியராச்சிய” தீர்வை ஏற்கவில்லை என கூறவில்லை. அவர் “ஏக்கியராச்சிய” தீர்வுக்குள் சமஸ்டி உள்ளது என்றே கூறி வருகின்றார்.
ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி எப்படி இருக்கும் என்பது அவருக்குத் தான் வெளிச்சம். சமஸ்டியாட்சிக்குள் அரசின் இறைமை பகிரப்பட்டிருக்கும். ஒற்றையாட்சிக்குள் அவை பகிரப்பட மாட்டாது. அண்மைக்காலமாக சுமந்திரன் தன்னை கொழும்பு மைய அரசியலில் இருந்து விடுபட்ட தமிழ்த் தேசிய வாதியாக அடையாளம் காட்டி வருவதால் “ஏக்கியராச்சிய தீர்வை அடக்கி வாசிக்கின்றார்.
சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பயிற்சிப்பட்டறையில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதி நல்லாட்சி அரசாங்கத்தின் “ஏக்கியராச்சிய” தீர்வையே இனப் பிரச்சினைகளுக்கு தீர்வாக கொண்டுவரப்போவதாக கூறியிருந்தார்.
அந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் “ஏக்கியராச்சிய” தீர்விற்கு கடுமையாக எதிர்ப்பை தெரிவித்த போதும் அதில் தமிழரசுக் கட்சி சார்பில் கலந்து கொண்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக கலந்து கொண்ட சுரேஸ்பிரேமச்சந்திரனும் வாயே திறக்கவில்லை.
இதனால் “ஏக்கியராச்சிய” தீர்வு பற்றிய விவாதம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் அரச தரப்பிற்கும் இடையிலான விவாதமாக முடிந்ததே தவிர அரச தரப்பிற்கும் தமிழ்த் தரப்பிற்கும் இடையிலான விவாதமாக மாறவில்லை. இந்த மௌனம் “ஏக்கியராச்சிய” தீர்வை தமிழரசுக் கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக்கொண்டு விட்டதா? என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
கஜேந்திரகுமார் “ஏக்கியராச்சிய” தீர்வை உள்ளடக்கி புதிய அரசியல் யாப்பு வரப்போகின்றது என முழுமையாக நம்புகின்றார். இதனால் இலங்கை திரும்பியதும் “ஏக்கியராச்சிய” தீர்விற்கு எதிரான பரப்புரையை முடக்கி விட்டுள்ளார்.
அரசியல் தீர்வு
சமயத் தலைவர்களை சந்தித்து இது தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கி வருகின்றார். அண்மையில் ஆறு திருமுருகனையும், வேலன் சுவாமிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இவர்களுக்கு அப்பால் யாழ் வர்த்தக சங்கம் போன்ற சிவில் அமைப்புகளைச் சந்தித்து கலந்துரையாடியதோடு கிராமங்களில் சிறிய சிறிய கூட்டங்களையும் நடாத்தி வருகின்றார்.
அண்மையில் ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஏற்பாடு செய்த கருத்தரங்கிலும் கலந்து கொண்டு இது பற்றி உரையாற்றியிருந்தார். 13வது திருத்தம் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள ஒரு விடயம். அதனை நடைமுறைப்படுத்துவதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது ஆனால் அதனை ஒரு அரசியல் தீர்வாக திணிப்பதையே எதிர்க்கின்றனர்.
தமிழரசுக் கட்சியிடமும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் 13வது திருத்தத்தை அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கொள்ளலாம் என்ற கருத்து நிலவுகின்றது. ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 13வது திருத்தம் அரசியல் தீர்வின் ஆரம்பப் பிள்ளையாகக் கூட கொள்ள தகுதியற்றது என்றே கூறி வருகின்றது.
13-வது திருத்தம் பற்றிய பரப்புரையை முன்னெடுக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தரங்குகளில் சில வளவாளர்கள் 13-வது திருத்தத்தில் தேனும் பாலும் ஓடுவதாக கூற பார்க்கின்றனர்.
உண்மையில் இவ் வளவாளர்கள் 13 வது திருத்தத்தையும், மாகாண சபைகளின் நடைமுறை அனுபவங்களையும் ஆய்வு செய்துதான் கூறுகின்றார்களா? என்பது அவர்களுக்கு தான் வெளிச்சம் குறைந்த பட்சம் வரதராஜ பெருமாளிடமும், பிள்ளையானிடமும், விக்னேஸ்வரனிடமும் அனுபவங்களைக் கேட்ட பின் கருத்துக்களைத் தெரிவித்திருக்கலாம்.
மாகாண சபையினால் தமிழ் மக்களுக்கு கிடைத்த பயன் அரசியல் களம் கிடைத்தமையும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு பயிற்சி வழங்கியதும் மட்டும் தான். மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடுவது அவசியம். இல்லாவிட்டால் வட மாகாண சபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசிய கட்சிகள் கைப்பற்றுவது கடினமாகவே இருக்கும்.
கிழக்கு மாகாணம் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம் அங்கு தமிழரசுக்கட்சியும் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றுவது பற்றி ஆலோசித்து வருகின்றன.
அண்மைக்காலமாக வடமாகாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு அதிகரித்து வருகின்றது. தேசிய மக்கள் சக்தி தலைவர்களின் எளிமையான நடத்தை, போதைவஸ்துக்கும், ஊழலுக்கும் எதிரான அவர்களது செயற்பாடு தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை கவர்ந்தே வருகின்றது.
தேசிய மக்கள் சக்தியைச் சேர்த்தவர்கள் மிக நுணுக்கமாக கிராமங்களில் கட்சிச் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கு அப்பால் தமிழ்க் கட்சிகள் மீது மக்களுக்கு அதிர்ப்திகளும் தேசிய மக்கள் சக்தி நோக்கி அவர்களைத் தள்ளுகின்றது.
தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் சாதாரண மக்கள்
தமிழ்த் தேசியக் கட்சியின் பிரதேச சபைத் தலைவர் ஒருவர் சாதாரண மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் அலையாகச் செல்லப் பார்க்கின்றனர் என வாய்விட்டு கவலை தெரிவித்தார்.
கிராமமொன்றில் தமிழத் தேசியக் கட்சிக்கு ஆதரவான ஒருவரிடம் கிராமத்து இளைஞர்கள் “மாகாண சபைத் தேர்தலில் நாம் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிக்க போகின்றோம். நீங்கள் தமிழ்க் கட்சிக்காரர் எவரையும் இங்கு கூட்டிக் கொண்டு வர வேண்டாம்” என்று கூறியிருந்தனர்.
இவை சில உதாரணங்கள் மட்டுமே இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன. விதியே! விதியே! தமிழ்ச் சாதியை என்ன செய்ய நினைத்தாய் எனக் கூறி தலையடிப்பதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.




