தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்குகளினால் ஆயிரக்கணக்கானோருக்கு சிக்கல்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 1,000,000 குடும்பங்களுக்கு அதன் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அண்மையில் நாடாளுமன்ற குழு அறையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
இதில், மிகவும் வறுமையான மற்றும் வறுமையான பிரிவுகளின் கீழ் முறையே 313,947 குடும்பங்களும், 653,047 குடும்பங்களும் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்கவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அஸ்வெசும நலன்புரி திட்டங்கள்
மேலும், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நலன்புரித் திட்டங்களைப் பெறுவதற்கு 200,000 பேர் தகுதியடைந்துள்ள போதிலும் அவர்களுக்கு உரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதும் இங்கு தெரியவந்துள்ளது.
மேலும், மேன்முறையீடுகளில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்தும் குழு கேட்டறிந்துகொண்டுள்ளது.
இந்த வருடத்தின் மே மாதத்தில் ஒவ்வொரு பிரிவின் கீழும் அஸ்வெசும நலன்புரி திட்டங்கள் வழங்கிய முதல், நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக்கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை, கையளிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகளில் தெரிவு செய்யப்படவுள்ள பயனாளர்களின் எண்ணிக்கை போன்ற சரியான தகவல்கள் மற்றும் ஜூலை 2024 முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படவுள்ளது.
நலன்புரித்திட்ட புள்ளி விபரங்கள்
இதற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அளவுகோல்கள் குறித்த அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறும் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.
அத்துடன், கிராம சேவகர் பிரிவில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு எந்த அதிகாரிகளைச் சார்ந்தது என்பது தொடர்பில் பிரச்சினை உள்ளமையும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையொன்றையும், பெரும் எண்ணிக்கையிலான நபர்கள் தவறான தகவல்களை வழங்கி அஸ்வெசும பயனாளிகளாகியிருப்பது புலனாகியிருப்பதால் நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான தகவல்களை வழங்கியவர்களின் புள்ளிவிபரங்கள் அடங்கிய அறிக்கையயும் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |