தேசிய அரசாங்கம் வந்தால் கூட்டமைப்பு அமைச்சு பதவியை ஏற்பதற்கான சந்தர்ப்பம் இல்லை: எம்.ஏ.சுமந்திரன்
தேசிய அரசாங்கம் வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
''தேசிய அரசாங்கம் வந்தால் நாங்கள் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. அவ்வாறான ஒரு தேவையை இப்போது நாங்கள் கருதவில்லை. இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு மாறி மாறி வந்த அரசாங்கங்களே காரணம்.
மிகவும் முக்கிய காரணம் 30 வருடத்திற்கு மேலாக ஒரு போரை நடத்தியது. அதற்காகக் கண்மூடித்தனமாக எல்லா நாடுகளிடமும் கடன் வாங்கினார்கள். அதற்கு மாறி மாறி வந்த அரசாங்கங்களே பொறுப்பு.
இறுதியாகத் தவறு ஏற்பட்டது இந்த ஜனாதிபதியின் காலத்தில் தான். இதனை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களிடத்தில் உள்ளது.
இதில் நாம் பொறுப்பில்லாதவர்களாகச் செயற்பட முடியாது. இதனுடைய தாக்கம் எங்களது மக்களுக்கும் மோசமாக அமையப் போகிறது.
அவ்வாறு எமது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நாம் செயற்பட வேண்டும். அதற்கு தேவையான ஆதரவை இடைக்கால அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டுமாக இருந்தால் அப்போது அதற்கான முடிவை எடுப்போம்.
ஆனால், அமைச்சரவையில்
நாங்கள் சேர்ந்து இயங்க வேண்டிய தேவை ஏற்படவில்லை'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.