பாம்பன் புதிய தொடருந்து பாலத்தை திறந்து வைத்தார் மோடி!
புதிய இணைப்பு
தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் பாலம் இன்று பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திரத மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்திய மதிப்பில் சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கடல் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் 72.5 மீட்டர் நீளமுள்ள பகுதியை தூக்கி, அதன் கீழ் கப்பல்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி 17 மீற்றர் உயரத்திற்கு தூக்கப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இராமேஸ்வரம் - தாம்பரம் தொடருந்து போக்குவரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
செங்குத்து துாக்கு பாலம்
புதிய தொடருந்து பாலத்தை கப்பல்கள், ஆழ்கடல் கடற்றொழில் படகுகள் கடந்து செல்ல பாலம் நடுவில் 240 அடி நீளம் 570 தொன்னில் வடிவமைத்த செங்குத்து துாக்கு பாலம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த துாக்கு பாலத்தின் இருமுனையிலும் 34 மீ., உயரத்தில் இரு இரும்பு கோபுரங்கள் உள்ளன. இதன் மேல் தளத்தில் இரு ராட்சத இரும்பு வீல்கள் உள்ளன.
இந்த வீலில் துாக்கு பாலத்தை திறந்து மூட கம்பி வடங்கள் சுற்றி உள்ளனர்.இந்த பாலத்தை 'லிப்ட்' முறையில் திறந்து மூடும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
இதனை ஹைட்ராலிக் இயந்திரத்தில் பொருத்தி உள்ளதால் ஒருமுறை திறக்க 5 நிமிடம் 30 வினாடிகள் ஆகும்.
இதை 17 மீ., உயரம் வரை திறந்து வைத்திருக்க முடியும் என்பதால் கனரக சரக்கு கப்பல்கள், கடற்படை கப்பல்கள், எவ்வித சிரமம் இன்றி கடந்து செல்லலாம்.
வடிவமைப்பு
துாக்கு பாலம் மூடப்பட்டு இருக்கும் சமயத்தில் கடல் மட்டத்தில் இருந்து 11 மீ., உயரத்தில் இருக்கும். இதனால் துாக்கு பாலத்தை திறக்காமலே பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள படகுகள் பாலத்தை கடந்து செல்ல முடியும்.
ஸ்பெயின் நிறுவன பொறியாளர்களின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற துாக்கு பாலம் அமெரிக்கா, பிரான்சில் மட்டுமே உள்ளது.
புதிய தொடருந்து பாலம் மற்றும் துாக்கு பாலத்தில் மின்சார தொடருந்துகள் அதுவும் இரு தொடருந்துகள் செல்லும் வகையிலும் வடிவமைத்துள்ளனர்.
புதிய பாலத்தில் ஒரு வாரத்திற்கு 134 தொடருந்துகள் அதுவும் அதிகபட்சமாக 75 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும்.
துாக்கு பாலத்தின் இரு முனைகளில் உள்ள 34 மீ., உயர இரும்பு கோபுரத்தின் மேல் தளத்திற்கு செல்ல லிப்ட் வசதி உள்ளது.
உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வகையில் துாக்கு பாலத்தில் 'ஜிங்மெட்டாலைசிங்' மற்றும் 'பாலிசிலோசின் பெயின்ட்' பூசி உள்ளனர்.
35 ஆண்டிற்கு துருப்பிடிக்காத வகையில் இந்த ரசாயனம் கலந்த பெயின்ட் பூசியதற்கு செலவு ஒரு கோடி ரூபாயை தாண்டியது. இந்த உயர் ரக பெயின்ட் இந்தியாவில் வேறு எந்த தொடருந்து பாலத்திற்கும் பூசப்படவில்லை
முதலாம் இணைப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பாம்பன் புதிய தொடருந்து பாலத்தை திறந்து வைப்பதற்காக இன்று (6) தமிழகம் செல்ல உள்ளார்.
இலங்கை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து மண்டபம் செல்லவுள்ள நிலையில் குறித்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்தின் மத்திய பகுதிக்கு சென்று பகல் 12.00 மணியளவில் புதிய பாம்பன் தொடருந்து பாலத்தை கொடி அசைத்து திறந்து வைக்கவுள்ளார்.
பாம்பன் சாலை பாலம்
தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்திலிருந்து 12.30 மணியளவில் புறப்பட்டு நேராக இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு இன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை, இராமேஸ்வரம் - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும்.
அதுபோல இராமேஸ்வரம் நகரத்திற்குள் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும் என இராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |