நந்திக்கடலோர வயல் நிலங்களை மூடிய வெள்ளம் : விவசாயிகள் கவலையில்(Photos)
முல்லைத்தீவு வற்றாப்பளையில் உள்ள நந்தியுடையார் வெளியில் விதைக்கப்பட்ட பெரும் போக நெல் வயல்கள் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளன.
நந்திக்கடலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வயல் நிலங்களை மூடி வெள்ளம் பாய்கின்றது.
கடந்த காலங்களில் சில நாட்களில் வெள்ளம் வடிந்தது விட்ட போதும் இந்த முறை வழமைக்கு மாறாக வெள்ள நீர் வடிந்தோட நீண்ட நாட்களாகின்றது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பாலக்கட்டுவான் குளத்திலிருந்தும் கணுக்கேணி குளத்திலிருந்தும் மேலதிக நீர் நந்திக்கடலின் மஞ்சள் பாலம் ஊடாக நந்திக்கடலினை வந்தடைகின்றன.
அதுபோலவே முத்தையன் கட்டு குளத்திலிருந்து வெளியேறும் மேலதிக நீர் பேராறு மூலம் நந்திக்கடலில் கலக்கின்றது. ஊற்றங்கரை நீரேந்து வெளிகளினூடாகவும் அதிகளவு நீர் நந்திக்கடலினை சேர்கின்றது. காடுகளில் சேரும் வெள்ளமும் நந்திக்கடலினை அடைவதால் குறுகிய நாட்களில் அதிகளவு நீர்வரத்தை பெறுகின்றதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
வழமைக்கு மாறாக தேங்கும் வெள்ளம்
கடந்த காலங்களில் நந்திக்கடலின் நீர்மட்டம் உயரும்போது வெட்டுவாகல் தொடுவாய் வெட்டப்பட்டும். அதனூடாக தண்ணீர் கடலுக்குச் சென்றுவிடும். வயல் நிலங்களில் தேங்கிய வெள்ளம் வடிந்து விடும். இதனால் பயிர்களின் இறப்பு தவிர்க்கப்படும்.
எனினும் இம்முறை பல நாட்களாக வெள்ளம் தொடர்ந்து வயல் நிலங்களை மூடியிருப்பதனால் பயிர்களின் இறப்பு சாத்தியமாகலாம் என எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிடுகின்றனர் விவசாயிகள்.
நந்திக்கடலுக்கும் வற்றாப்பளை வீதிக்கும் இடையில் உள்ள வயல் நிலங்களில் நந்திக்கடலினை அண்டிய பகுதிகளில் உள்ள வயல்கள் வெள்ளத்தினால் மூடப்பட்டுள்ளன.
வெள்ளம் மூடியுள்ளதால் வயல் நிலங்கள் குளம் போல் காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நந்திக்கடலில் சேரும் நீர் வெட்டுவாகல் பாலத்தினூடாக பெருங்கடலுக்கு பாய்ந்தவாறே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலக்கட்டுவான் வயல்களும் வெள்ளத்தில்
பாலக்கட்டுவான் குளத்திற்கு கீழுள்ள வயல்கள் பாலக்கட்டுவான் வயல்கள் எனப்படுகின்றன. பாலக்கட்டுவான் குளத்திலிருந்து வெளியேறும் மேலதிக நீர் மஞ்சள் பாலம் ஊடாக நந்திக்கடலில் கலக்கின்றது.
வௌவால்வெளி,மஞ்சள்கொடிவெளி என குளத்திற்கு கீழுள்ள பல வயல் நிலங்களும் வெள்ளத்தால் மூடி பல நாட்களாவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
சுவாமி தோட்டத்தின் தாழ்வான நிலங்களில் விதைக்கப்பட்ட வயல் நிலங்களில் உள்ளும் வெள்ளம் உட்புகுந்து கொண்டு வடிந்தோட நாளாவதால் பயிர்களின் இறந்துவிடும் என தான் அஞ்சுவதாக நிலக்கடலையோடு வயலை பயிரிட்டுள்ள உடுப்புகுளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் குறிப்பிட்டார்.
பாலக்கட்டுவான் இருந்து பெருமளவு வெள்ளம் மஞ்சள் பாலத்தினூடாக நந்திக்கடலினை அடைவதனாலேயே நந்திவெளி வயல் நிலங்களில் வெள்ளம் சேர்வதும் குறிப்பிடத்தக்கது.நந்திக்கடலின் நீரேந்து பகுதிகளெல்லாம் நீரால் நிறைந்துள்ளது.
நந்தியுடையார் வெளி வயல்கள்
வற்றாப்பளை அம்மன் கோவிலைச் சூழவுள்ள வயல்வெளிகளும் மூன்றாம் கட்டை சந்தி வரையுள்ள வயல்வெளிகளும் நந்தியுடையார் என்ற பெரு வேளாளர் ஒருவர் வயல் செய்து வந்ததால் அந்த அந்த வயல் வெளிகள் நந்தியுடையார் வெளி என அழைக்கப்படுவதாக முள்ளியவளையில் உள்ள வரலாற்றுத் தேடலுடைய பலரிடம் நந்தியுடையார் வெளி தொடர்பாக கேட்டபோது குறிப்பிட்டனர்.
வற்றாப்பளையைச் சேர்ந்தவரும் இதே கருத்துடையதாக தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
நந்தியுடையார் காரணமாகவே இந்த நீரேரியும் நந்திக்கடல் என பெயர் பெற்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
நந்தியுடையார் வரலாறு நந்தியுடையார் என்ற பெயரில் நாடக நூலாக வடிவம் பெற்றுள்ளமையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |