ஜனாதிபதி அனுரவிடம், நாமல் விடுத்துள்ள கோரிக்கை
ஜனாதிபதி செயலாளர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குளியாப்பிட்டியவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான தனது நிலைப்பாட்டை நிரூபிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருடர்களைப் பிடிப்பது மற்றும் நேர்மையை உறுதி செய்வது குறித்து ஜனாதிபதி தொடர்ந்து பேசுகிறார். அந்த உறுதிப்பாட்டை நிரூபிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு அரசாங்கம் வழங்கியிருந்த பல்வேறு வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்தும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல் கொள்வனவு விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசியின் விலை அதிகரித்துள்ளதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பொதுமக்கள் எதிர்கொள்ளும் வரிச்சுமை, மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பு குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது, குறிப்பாக இளம் தொழில் முனைவோருக்கு, மேலும் சிரமமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரச நிறுவனங்களைச் சார்ந்ததாகக் கூறப்படும் பாதுகாப்பு மற்றும் இணையவழி சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இச்சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் காண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசியல் முரண்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“அரசாங்கம் மோதல்களை ஒதுக்கி வைத்து மக்களுக்காக பணியாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளையே தவிர, மேலும் அரசியல் முரண்பாடுகளை அல்ல” என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு எதிர்க்கட்சியே பொறுப்பு என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.
துறைமுகத்தின் செயற்பாடுகளில் தலையிடும் அதிகாரம் எதிர்க்கட்சிக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் வெளிப்படையான விசாரணைகளை நடத்தி, விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.