மரண அச்சுறுத்தலால் விசாரணை வலையில் சிக்கிய நாமல் மற்றும் மகிந்த! வலுக்கட்டாயமாக பெறப்பட்டதா வாக்குமூலம்
நாமல் ராஜபக்சவை இலங்கையின் நெல்சன் மண்டேலாவாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உருவாக்கிக் கொண்டிருக்கின்றார் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வலுக்கட்டாயமாக பதிவு செய்யப்பட்ட பெயர்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பாக கபில சந்திரசேனவே முதலில் கைது செய்யப்பட்டார். அவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைத்துச் சென்று, அதன் பணிப்பாளர் நாயகத்தின் அறைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவரது வாக்குமூலத்தில் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் பெயர்களை வலுக்கட்டாயமாகப் பதிவு செய்ததாகவும் கபில சந்திரசேன நீதவானிடம் சத்தியப்பிரமாணம் செய்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால், இன்றுவரை அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் எந்தவொரு விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை. அவர் செய்த முறைப்பாடும் கவனத்திற் கொள்ளப்படவில்லை.

அதேவேளை, ஏர்பஸ் கொடுக்கல் வாங்கலில் பணம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் இருவர் குறித்து எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களுள் ஒருவர் கபில சந்திரசேன. அவரது வங்கிக் கணக்கின் ஊடாகப் பணம் சென்றுள்ளது. மற்றையவர் நிமல் பெரேரா. அவரது வங்கிக் கணக்கிற்கும் குறிப்பிட்ட தொகை பணம் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அப்படியானால், ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டில இருவர்தான் இருக்கக்கூடும். ஆனால், முதல் சந்தேகநபரான கபில சந்திரசேன அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, இறுதியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இரண்டாவது சந்தேகநபரான நிமல் பெரேரா அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று அவரைக் கைது செய்யாமல், அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து கொண்டு திரும்பியுள்ளனர்.
அந்த வாக்குமூலத்தில், தனக்குக் கிடைத்த பணத்தை எடுத்துச் சென்று நாமல் ராஜபக்சவின் அறையில் வைத்துவிட்டதா அவர் கூறியுள்ளார். ஆனால், அந்தப் பணம் எப்போது, கொடுக்கப்பட்டது, எந்த இடத்தில் கொடுக்கப்பட்டது, எந்த நேரத்தில் கொடுக்கப்பட்டது, எவ்வாறு கொடுக்கப்பட்டது என்பன தொடர்பில் எந்தவொரு விபரமும் தெரிவிக்கப்படவில்லை.

100 மில்லியன் ரூபாய் என்பது சாதாரணமாக இரண்டு பெரிய மூட்டைகளில் எடுத்துச் செல்ல வேண்டிய பணமாகும். ஆனால், அந்தப் பணம் எந்த வங்கியில் இருந்து மீளப் பெறப்பட்டது என்பதைக் கூட அவர் குறிப்பிடவில்லை. இருப்பினும் அந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு சத்தியப்பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆவணத்தின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச இன்று வரையிலும் பிணை வழங்கப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்சவை சிறையில் வைத்திருப்பதன் மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடர முடியும் என்று நினைத்தால், அது அவரது தவறான கணிப்பாகவே அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri