குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்கிறேன்! நாமல் பகிரங்கமாக தெரிவிப்பு
எங்கள் மீது முன்வைக்கப்படும் பெரும் குற்றச்சாட்டு என்னவென்றால் எங்கள் திட்டங்களை நாங்கள் மக்களுக்கு தெரிவிக்கவில்லை என்பதே, அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியும், அரசாங்கமும் தங்கள் திட்டங்கள் குறித்து மக்களுடன் அதிக வெளிப்படை தன்மையுடன் இருந்திருக்க வேண்டும். மக்களிற்கு அவற்றை அதிகளவிற்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.
எங்கள் மீது முன்வைக்கப்படும் பெரும் குற்றச்சாட்டு என்னவென்றால் நாங்கள் மக்களிற்கு திட்டங்களை தெரிவிக்கவில்லை என்பதே. அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இலங்கையில் திட்டமிடப்பட்ட மாற்றங்கள் அவசியம்.
காலத்திற்கு ஒவ்வாத நிர்வாக முறைமை காரணமாகவும் அதிகாரிகள் மட்ட நடவடிக்கை காரணமாகவும், முற்போக்கான தலைமைத்துவம் செயற்பட முடியாத நிலை காணப்பட்டது என நான் கருதுகிறேன்.
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் வெளிப்படையாக செயற்படவில்லை. ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களை தெரிவிக்க வேண்டும். மக்கள் ஏன் சீற்றத்துடன் உள்ளனர் என்பதை நான் புரிந்து கொள்கின்றேன்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான அவர்களது உரிமையை ஆதரிக்கின்றேன். ஆனால் இந்த ஆத்திரம் பயனற்றது, அது மேலும் நெருக்கடிகளையே ஏற்படுத்தும்.
அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவக்கூடிய சுற்றுலாப் பயணிகள் வருகையை தடுத்து நிறுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.