சிஐடி முன் ஒலித்த "ஜெய வேவா" சத்தம்.. பின்னணியே தெரியாமல் கூடிய மொட்டு ஆதரவாளர்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மனைவி ஷிரந்தி மற்றும் மகன் நாமல் குற்றபுலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய போது, மொட்டுக் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் அங்கு கூடியிருந்தனர்.
இவர்கள், அக்கட்சியின் ஆதரவாளர்கள் எனவும், ஷிரந்தி மற்றும் நாமலுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்த வந்திருந்ததாகவும் இருப்பினும், இருவரும் எவ்விடயத்திற்காக சிஐடியில் முன்னிலையாகினர் என்பது கூட அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை எனவும் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த செய்தியின் படி, அந்த மக்கள், ஷிரந்தி - நாமலின் வருகையை கேள்விப்பட்டு ஒரு பெரிய குழுவாக, தங்களது ஆதரவை தெரிவிக்க வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணைக்கு சென்ற ஷிரந்தி - நாமல்
கூடியிருந்த பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள், குற்றபுலனாய்வுத் திணைக்களத்திற்கு முன், "ஜெய வேவா" என்று கூச்சலிட்டனர்.

அங்கு இருந்தவர்களில் பெரும்பாலோருக்கு அன்று என்ன நடக்கிறது அல்லது ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் எந்த விஷயத்திற்காக அழைக்கப்பட்டார்கள் என்பது பற்றிய தெளிவான புரிதல் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்ட பின்னர் பேருந்தில் வந்த ஆதரவாளர்கள் குழு, நாமல் ராஜபக்ச வாக்குமூலம் அளிக்க வருவதாக தொலைக்காட்சி செய்திகளிலிருந்து அறிந்தவர்கள் என கூறப்படுகின்றது.
இதன்போது அவர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டிற்கு பெரிதும் சேவை செய்த ஒரு தலைவர் என்றும், அவரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த செயல்முறை நியாயமற்றது என்றும் கடுமையாக தெரிவித்துள்ளனர்.
நாமல் ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் எதற்காக முன்னிலையாகினர் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை என்றாலும், இது ஒரு அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்ட சதி என பார்ப்பதாக குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.