ஓரிரு வருடங்களில் இலங்கையில் மீண்டும் நெருக்கடி! நாமல் எச்சரிக்கை
இறக்குமதியை மாத்திரம் நம்பியிருந்தால் இன்னும் ஓரிரு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நாடு வங்குரோத்து நிலையடைய நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியல் கட்சிகள் தேர்தல்கள் குறித்து தற்போது தங்களின் நிலைப்பாட்டை குறிப்பிட்டுக் கொள்கின்றன. எந்த தேர்தலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஆகவே தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.
ரணிலின் கொள்கை நாட்டுக்கு பயனுடையதாக அமைய வேண்டும்
அரசியல் கட்சிகளுக்குள் மாறுப்பட்ட பல கருத்துகள் தோற்றம் பெற்றுள்ளன.அரசாங்கத்துடன் இருப்போம் என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். எதிர்க்கட்சிக்கு செல்வோம் என பிறிதொரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். அனைத்து அரசியல் கட்சிகளுக்குள் முரண்பாடு காணப்படுகிறது. கட்சித் தலைவர் ஒருபுறம், உறுப்பினர்கள் மறுபுறம் என்ற நிலை காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் ஒரு ஆசனத்துடன் நாடாளுமன்றத்துக்கு வந்த அரசியல் கட்சி அடுத்த தேர்தலில் ஆசனங்களை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய லிபரல் வாத கொள்கை நாட்டுக்கும் மக்களுக்கும் பயனுடையதாக அமைய வேண்டும்.
மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி மறுசீரமைப்புக்களை செய்வதால் முன்னேற்றமடைய முடியாது.ஆகவே மறுசீரமைப்புக்கள் மக்களுக்கு சாதகமாக அமைய வேண்டும்.
தேசிய உற்பத்திகளை மேம்படுத்த புதிய செயற்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இறக்குமதியை மாத்திரம் நம்பியிருந்தால் இன்னும் ஓரிரு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் வங்குரோத்து நிலையடைய நேரிடும் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |