வலுசக்தி அமைச்சர் தாமாகவே பதவி விலக வேண்டும்! நாமல் ராஜபக்ஷ எம்.பி. வலியுறுத்தல்
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கும் வரை காத்திருக்காமல், அவர் தானாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொறுப்புக்கூறல்
அரசாங்கமே முறைகேடுகள் இடம்பெற்றதை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அதற்கான பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது என்று அமைச்சர்கள் கூறினாலும், அதன் மூலம் ஏற்படும் நட்டத்தை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
"ஆளுங்கட்சியுடன் தொடர்புடைய எவருக்கும் ஊழலில் தொடர்பில்லை என முன்னர் கூறப்பட்டது. ஆனால், தற்போது வலுசக்தி அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அந்தக் கூற்றுகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது" என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நகர்வுகள்
நாட்டின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், ஜனநாயகக் கட்டமைப்புக்குள் புதிய தலைமைத்துவங்கள் உருவாவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் தலைமையிலான அரசியல் சக்திகள் நாட்டின் அரசியல் களத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூத்த அரசியல் தலைவர்களை ஓரம் கட்டுவது தவறு என்று தெரிவித்த அவர், இளம் தலைவர்கள் உருவாவதற்கு அனுபவம் வாய்ந்த தலைவர்களின் வழிகாட்டல் அவசியம் என்றும் வலியுறுத்தினார். "கடந்த காலத் தவறுகளைத் திருத்திக்கொண்டு, நவீனமயமாக்கலுடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்." - என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. மேலும் சுட்டிக்காட்டினார்.