சஜித் அணியின் பலவீனம்.. நாமல் பகிரங்கம்!
எதிர்க்கட்சியில் இருக்கும் சிலர் தங்களின் நம்பிக்கை மற்றும் சிந்தனைகளை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அதற்கான சில காரணங்கள் இருப்பதாகவே தோன்றுகிறது என்று மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் நவம்பர் 21ஆம் திகதி நடத்தப்படவுள்ள அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, தொடர்ந்து பேசிய அவர், "உண்மையான எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் நேரம் வந்துள்ளது. மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கும் மக்களின் பக்கம் நிற்பதற்கு பதவி பட்டங்கள் தேவையில்லை என நினைக்கிறேன்.
மக்களுக்கான போராட்டம்
தங்களின் கால நேரம் மற்றும் அதிஷ்டம் வரும் வரை காத்திருப்பதை விடுத்து மக்களுக்கு தேவை ஏற்படும் அவர்களுக்காக போராட வேண்டும். மொட்டுக் கட்சி அதற்காக தயாராகி வருகிறது.

எமது கட்சி மக்களின் கட்சியாகும். மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அதை மறந்து சர்வாதிகார போக்கை கடைப்பிடிப்பதாகவே தோன்றுகிறது.
அதற்கு எதிராக நாம் முன்னிற்போம். 2015 ஆம் ஆண்டும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக 34 உறுப்பினர்களுடன் நாம் செயற்பட்டோம். அன்று எதிர்க்கட்சிகள் அரசுடனே இருந்தன. அதே போலவே இன்றும் நடப்பதாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.