அடுக்கடுக்கான பொய்களைக் கூறி ஆட்சியைப் பிடித்தது அநுர அரசு - நாமல் எம்.பி. கடும் சாடல்
தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அடுக்கடுக்கான பொய்களைக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கடுமையாகச் சாடியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, மாவட்ட அமைப்பாளர்களை நியமிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், "அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்கள் மற்றும் தற்போதைய வரிக்கொள்கையினால் நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தின் நிர்வாகத் தவறுகளால் ஏற்படும் நட்டங்கள் அனைத்தும் வரி என்ற பெயரில் மக்கள் மீதே சுமத்தப்படுகின்றன.
நிர்வாகத் தவறுகள்
முன்னைய ஆட்சியின் போது கணக்கில் 'ட்ரில்லியன்' கணக்கில் பணம் இருப்பதாகக் கூறியவர்கள், இன்று அது குறித்துப் பேசுவதே இல்லை. எரிபொருள் விவகாரத்தில் 45 நாள்களுக்குப் போதுமான கையிருப்பு இருப்பதாக முன்னதாகக் கூறிவிட்டு, தற்போது உலக சந்தை விலையை விட அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

இது அரசாங்கத்தின் திட்டமிடப்படாத செயற்பாட்டையே காட்டுகின்றது. உள்நாட்டு விவசாயிகளை வலுப்படுத்துவதை விடுத்து, வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து நுகரும் கலாச்சாரத்தை இந்த அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றது.
இதன் காரணமாகக் கிராமப்புறங்களில் கடும் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தொடர்பான அச்சமும் எழுந்துள்ளது. இதற்கு அரசாங்கமே முழுமையாகப் பொறுப்புக் கூற வேண்டும்.
நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. ஊழலுக்கு எதிராகப் பேசுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று பல்வேறு முறைகேடுகளில் சிக்கியுள்ளனர்.
ஒரு அணியாகச் செயற்பட்டு நாட்டுக்காக வேலை செய்வதை விடுத்து, பழைய அணிகளைக் குற்றம் சுமத்தித் தனது தோல்விகளை மறைக்க அரசாங்கம் முயலக் கூடாது." என்றார்.